
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை 4 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலக வாயிற் கதவுகளை மூடினர். அலுவலகத்தில் உள்ளே உள்ள நபர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பொதுமக்களும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர சோதனை நடத்தினர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றசாட்டு உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.84 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பணம் தொடர்பாக அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை இரவு வரை நீடித்தது.