
திண்டுக்கல் பாண்டியன் நகரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு நெடுஞ்சாலைத் துறை சம்பந்தமான கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கோட்டப் பொறியாளராக மதன்குமார் என்பவர் பணி செய்து வருகிறார்.
நெடுஞ்சாலைத் துறை சம்பந்தமான கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் விடப்பட்டு, பணிகள் முடிந்ததும் ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான நிதி கொடுக்கப்படுகிறது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. அப்புகாரின் அடிப்படையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி மற்றும் போலீசார் ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட தயாரான அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்குள் வைத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கோட்ட பொறியாளர் மதன்குமார், அவரது அறையில் இருந்த கைப்பையில் கணக்கில் வராத ரூ. 4 லட்சத்து 70 ஆயிரம் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன்பிறகு அதனை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து விசாரணைக்கு பின்னர் அனைத்து அலுவலர்களும் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கோட்ட பொறியாளர் மதன்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கணக்கில் வராத பணம் அலுவலகத்தில் வைத்திருந்தது தொடர்பாக மதன்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள்.