திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மாகாளிபட்டியில் மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஆய்வாளராக சுந்தரராமன் பணியாற்றி வருகிறார். இங்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மணப்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது கணக்கில் காட்டப்படாத 60 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையில், ஆனந்தன் முகவராக இருந்து சுந்தரராமனுக்கு பணம் வசூல் செய்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரராமன் மற்றும் முகவர் ஆனந்தன் ஆகியோர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் முசிறி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் சுகுமார், 4 பத்திர எழுத்தர்கள், இரண்டு முகவர்கள் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டார வாகன ஆய்வாளர் சுந்தரராமன், முசிறி சார்பதிவாளர் சுகுமார் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்துள்ளனர்.