
தொழிற்சாலைகளில் நிறுவப்படும் பாய்லர் எனப்படும் கொதிகலன்களுக்கு பொதுப்பணித்துறை கொதிகலன் பிரிவில் அனுமதி பெறப்பட வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை கொதிகலன் உறுதித்தன்மை குறித்து அந்தப் பிரிவு சான்று வழங்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி வழங்குவதற்கும் புதுப்பிக்கவும், பொதுப்பணித்துறையினர் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளது. இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி ஈரோடு பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் நான்கு அரிசி ஆலைகளில் கள ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து டி.எஸ்.பி திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரேகா மற்றும் போலீசார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் தளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் ரூபாய் 1.61 லட்சம் பறிமுதல் செய்தார்கள். இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் அவருக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த பவானி எலவமலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு சங்கு நகரில் உள்ள உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் வீட்டில் 15ஆம் தேதி இரவு டி.எஸ்.பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரொக்கமாக ரூபாய் 66 ஆயிரமும் மேலும் ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு மட்டும் ரூபாய் 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்டுள்ள மற்ற சொத்து ஆவணங்களின் மதிப்பு குறித்து போலீசார் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உதவி இயக்குனர் மகேஷ் பாண்டியன் சொந்த மாவட்டம் தேனி என்பதால் அங்கு உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை முடிவில்தான் எவ்வளவு ரூபாய், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகிறார்கள்.