எட்டு மணி நேர சோதனை... சிக்கிய லட்சங்கள்... விசாரணை வளையத்தில் திட்ட மேலாளர்

Anti corruption department raid  Project Manager in the Inquiry

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தினுள் உள்ள, ஒன்றிய வட்டார சேவை மையத்தில் மகளிர் வளர்ச்சி திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் திருவேங்கடம், வருவாய்த்துறை ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் எட்டு மணி நேரமாக நடைபெற்ற சோதனை இரவு 12 மணியளவில் முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் ஏழைகள் மற்றும் மகளிரை கொண்டு குழுக்கள் அமைத்தல், தொழில் குழுவை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 51 ஊராட்சிகளிலும் கணக்கீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Anti corruption department raid  Project Manager in the Inquiry

அவ்வாறு பணிபுரியும் கணக்கீட்டாளர்களுக்கு மாதம் 2000 ரூபாய் என இரண்டு வருடத்திற்கு ஒருமுறை 48,000 ரூபாய் சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு சமீபத்தில் அனைத்து கணக்கிட்டாளர்களுக்கும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள வட்டார சேவை மைய அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய உதவி திட்ட அலுவலர் சித்ரா மற்றும் மேலாளர் கலைச்செல்வி ஆகிய இருவரும் கிராமப்புற கணக்கீட்டாளர்களை மிரட்டி சம்பளம் வாங்கிய பணத்தை கொண்டு வர வேண்டுமென கூறியுள்ளனர். அவ்வாறு சம்பளப் பணத்தை கொண்டு வந்த கணக்கீட்டாளர்களிடம், பணத்தை வாங்கிக் கொண்டு, சொர்ப்ப பணத்தை மட்டுமே சம்பளமாக கொடுப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்தில் இயங்கக்கூடிய மகளிர் திட்ட அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத 3 லட்சத்தி 16 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் தான் முழுமையான தகவல்கள் வெளிவரும்" என்றனர்.

Anti corruption department raid  Project Manager in the Inquiry

மேலும் லஞ்சம் பெற்றதாக உதவி திட்ட அலுவலர் சித்ரா, மேலாளர் கலைச்செல்வி ஆகியோர் மீது விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானால் வருவாய் துறையினர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனர். விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நள்ளிரவு வரை எட்டு மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Cuddalore virudhachalam
இதையும் படியுங்கள்
Subscribe