Anti Corruption Awareness Week in thiruvallur district

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம், அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisment

ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு இன்று திருவள்ளூர் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் கூறி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் தமிழரசிகலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பேசிய ஆய்வாளர் தமிழரசி, “ஊழலில் 185 நாடுகளில் 85வது இடத்தில் நமது நாடு உள்ளது. அனைத்து துறைகளிலுமே ஊழல் உள்ளது. ஊழலில் முதல் இடத்தில் உள்ள துறை எது என சொல்லுங்கள்” என நகராட்சி ஊழியரிடம் கேட்டார். அப்போது நகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்காமல் அமைதி காத்த நிலையில், ஊழல் தடுப்பு அதிகாரியே “சார்பதிவாளர் அலுவலகமா, ஆர்.டி.ஓ. அலுவலகமா, வருவாய்த் துறையினரா? எந்தத் துறை ஊழலில் முதல் இடத்தில் உள்ளது” எனக் கேட்டார்.

Advertisment

Anti Corruption Awareness Week in thiruvallur district

இதற்கு ஊழியர்கள், “ரிஜிஸ்டர் ஆபீஸ், ஆர்.டி.ஓ.” எனத்தெரிவித்தனர். தொடர்ந்து ஆய்வாளர் தமிழரசி, “இத்தனை வருட பணியில் நான் லஞ்சம் வாங்கவில்லை என ஒருவர் தெரிவியுங்கள். நான் உங்கள் காலில் விழுகிறேன்” என்று கூறினார். அப்போது நகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் பதில் சொல்லாமல் மௌனம் காத்து, ஆய்வாளரின் முகத்தையே பார்த்தனர். தொடர்ந்து பேசிய ஆய்வாளர் தமிழரசி, “பொதுமக்கள் தங்களின் தேவைக்காக நம்மிடம் வரும்போது அவர்களின் அப்பிரியன்ஸை பார்க்கிறோம். ஆள் பாதி ஆடை பாதி பார்த்து அவர்களுக்கு மரியாதை அளிக்கிறோம். அதேபோல் எளிமையாக வரும் பாமர மக்களுக்கும் மரியாதை அளித்தால் உங்களை எதிரியாகவே பார்க்க மாட்டார்கள்.

2009 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், லஞ்சமாக ஒருவரிடம் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கித் தருமாறு கேட்டுப் பெற்றார். அதனை வீட்டில் வைத்தபோது, ‘பொருட்கள் சிறிதாக உள்ளது; இதை கூடவா உங்களால் பார்த்து வாங்க முடியாது’ என அந்த அதிகாரியின் மனைவி கேட்க, பொருட்களை வாங்கித் தந்த நபருக்கு அந்த அதிகாரி போன் செய்து பொருட்கள் சிறிதாக உள்ளது வேறு மாற்றி தர கூறியுள்ளார். பொருட்களை மாற்ற மாட்டார்கள் என அந்நபர் தெரிவிக்க, அப்படி என்றால் மேலும் 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுக்குமாறு கேட்டார்.

ஆத்திரம் அடைந்த அந்த நபர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரியும், அவரது குடும்பமும் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் நீங்களும் உங்களது குடும்பமும் உங்களை சார்ந்தவர்களும் செழிப்பாக இருப்பார்கள். அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டால் வீட்டில் கொடுக்கப்பட்ட மரியாதை, வெளியில் கிடைத்த மரியாதை என அத்தனையும் தலைகீழாக மாறிவிடும்.

அடிப்படைத் தேவைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் அரசு அலுவலகங்களை நோக்கி வரும் மக்களுக்கு அவர்களது தேவைகளை மரியாதை அளித்து பூர்த்தி செய்தால் எந்த அவப்பெயரும் பிரச்சனையும் வராது” எனப் பேசினார்.