Skip to main content

பெண் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; சொத்துக்குவிப்பு புகாரில் அதிரடி!

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Anti bribery police raid the house of a woman officer Rural Development

 

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர்த்திக்கு தொடர்புடைய தர்மபுரி, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நார்த்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தமூர்த்தி (44). முன்னாள் வருவாய் ஆய்வாளர். இவருடைய மனைவி ஆர்த்தி (41). இவர், கடந்த 2019 - 2020ம் ஆண்டில், தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது வேலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ஆர்த்தி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

 

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) காலை 6 மணிக்கு நல்லம்பள்ளி நார்த்தம்பட்டியில் உள்ள தோட்டத்துடன் சேர்ந்துள்ள ஆர்த்தியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி பழனிசாமி தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 2 மணிநேரம் இந்த சோதனை  நடந்தது. அவருடைய வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதேபோல், வேலூரில் ஆர்த்தி தங்கியுள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் மாளிகையில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.     

 

மேலும், திருச்சியில் இ.பி.காலனியில் உள்ள ஆர்த்தியின் தந்தையான ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. ஆர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயர்களில் உள்ள வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் தொடர்பான சில முக்கிய ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் கூறுகையில், ''வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனையின்போது சில சொத்து ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்