கடந்த 19 ஆம் தேதி கடலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் நெல்லிகுப்பம் அடுத்துள்ள பட்டாம்பாக்கம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த இரு தனியார் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி நொறுங்கின. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும்கடலூர் மாவட்டத்தில்ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் இருந்து சிதம்பரம் சென்ற தனியார் பேருந்து பூண்டியாங்குப்பம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இதில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. முன்னர் நடந்த விபத்திற்கும் அதிவேகம்தான் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில் இந்த விபத்திற்கும் அதிவேகம்தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.