/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/doc-balaj-art.jpg)
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் இன்று (13.11.2024) காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் தாயாருக்கு சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையில் கடந்த நான்கு மாத காலமாகப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த மற்றொரு நபரும் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்திலேயே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் தான் சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மருத்துவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஹரிகரன் என்ற மனநல மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளி, மருத்துவர் ஹரிகரன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனையின் முதல்வர் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஹரிகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)