Skip to main content

மேலும் ஒரு 108 ஆம்புலன்ஸ் விபத்து...

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
Another 108 ambulance accident

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த இளையனார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி சங்கீதா(23) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர் கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அங்கு பிரசவம் பார்ப்பதற்கு போதிய வசதி இல்லை என்ற காரணத்தினால் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சங்கீதாவை 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

சங்கீதா உடன் அவரது மாமியார் ரோஸ் உறவினர் வசந்தி வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஷா பணியாளர் அமுதவள்ளி 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் லகாதீர் ஆகியோர் உடனிருந்தனர். ஆம்புலன்சை வேலூர் மாவட்டம் படைவல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது சரத்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த108 ஆம்புலன்ஸ் வாகனம் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள மாமந்தூர் பகுதியில் சென்றபோது ஆம்புலன்ஸில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணிப் பெண் சங்கீதா உட்பட 6 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து உடனடியாக மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட சங்கீதாவிற்கு நேற்று காலை அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த 10ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிப்பெண் மற்றும் அவரது உறவினர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது விபத்து ஏற்பட்டு கர்ப்பிணிப் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வு மறைவதற்குள் மீண்டும் மற்றொரு 108 ஆம்புலன்ஸ் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் டிரைவராக பணி செய்து வரும் சரத்குமார் ஏற்கனவே இதுபோன்ற சில விபத்துக்களை ஏற்படுத்தியவர் என்றும் பணிச்சுமை காரணமாக அவர் தூக்கமின்மையால் இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர். எனவே இதுகுறித்து சுகாதாரத்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணி நேரத்தை நடைமுறைப்படுத்தி அவர்களுக்குரிய ஓய்வு அளிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பராமரிப்பு பணிகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை அடிக்கடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவசரத் தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்