Announcement! When is the mid-term exam in the storm affected districts

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

ஃபெஞ்சல் புயல் மற்றும் பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (06.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிய பிறகு செய்முறைத் தேர்வுகளையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு முந்தைய அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறையான டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 01ஆம் தேதி வரை இம்மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.