Announcement of Vaikam Award to famous writer Tamil Nadu Government Information

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (12.12.2024) வைக்கம் நகரில் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இந்த விழாவிற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார்.

தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன், நன்றியுரை வழங்குகிறார். இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள மாநிலம் வைக்கம் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சின் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும், ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்டம்பர் 17ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, 2024ஆம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12.12.2024) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.