Published on 23/11/2021 | Edited on 23/11/2021

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகச் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. அதேபோல் கடந்த 21 ஆம் தேதி தமிழகம் வந்த மத்திய ஆய்வுக் குழுவும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நாளை இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தலைமைச் செயலகத்தில் காணொலி வழியாக முதல்வர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.