
கரோனா விழிப்புணர்வு குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமராட்சி தமிழ்வாணன், பட்டு சௌந்தரராஜன், செட்டி கட்டளை செல்வகுமார், வரகூர் பாலா உட்படப் பல ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் கரோனா பரவாமல் தடுப்பது குறித்து சார் ஆட்சியர் மதுபாலன் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சி நடந்து முடியும்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமராட்சி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் சார் ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார். அதில் “ஒவ்வொரு ஊராட்சியிலும் போதிய நிதி வசதி இல்லாமல் தலைவர்களான நாங்கள் தத்தளிக்கிறோம். அரசு அதிகாரிகள் கிராமப்புறங்களில் செய்யவேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறு உத்தர விடுகிறார்கள். தலைவர்கள் சொந்தப் பணத்தில் செலவு பணிகளைச் செய்யுமாறு கூறுகிறார்கள். அதன்படி நாங்களும் கடன் பெற்று மக்களுக்கான பணிகளைத் தொய்வின்றி செய்கிறோம். ஆனால் அரசு நாங்கள் செலவு செய்த அந்த பணத்தைத் திருப்பித் தரவில்லை. அதற்கு உதாரணம் கடந்த ஆண்டு புரவி புயலின் போது அந்தந்த கிராமத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு வாரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி அதற்கான முழு செலவையும் நாங்களே செய்தோம். அதற்கான தொகை இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு வரவில்லை. இதேபோன்று, ஊராட்சியின் பொது நிதியில் போதுமான நிதி இல்லாததால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களுடன் கலந்து அவர்களின் தேவைகளை, பிரச்சனைகளை நேரில் சென்று உடனுக்குடன் நிறைவேற்றி வரும் எங்களையும் அரசு முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அது மேலும் பரவாமல் தடுக்கவும் அரசு ஊராட்சிகளுக்குக் கூடுதல் நிதியை உடனடியாக அளித்து உதவ வேண்டும். அப்போதுதான் எங்களால் பணிகளைத் திறம்படச் செயல்படுத்த முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சார் ஆட்சியர் மதுபாலன் இந்தக் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கரோனா விழிப்புணர்வு கூட்டம் நிறைவுபெற்றது. மேலும், தமிழக அரசு ஊராட்சிகளுக்குக் கூடுதலாக அவசரக் கால நிதியை அனுப்பி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை, அடிப்படைத் தேவைகளுக்கான செயல்பாடுகளை மேற்கொண்டிட விரைந்து உதவிட வேண்டும் என வலியுறுத்தினர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஊராட்சிகளுக்குத் தேவையான நிதி கடந்த ஆட்சியில் ஒதுக்கப்படவில்லை எனக்கூறிய ஊராட்சி மன்ற தலைவர்கள், ஸ்டாலின் தலைமையிலான அரசாவது அதில் தீவிர கவனம் செலுத்தி ஊராட்சிகள் தன்னிறைவு பெறும் வகையில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.