Annanagar girl case; Supreme Court action order

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் (30.08.2024) பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “தனது மகள் (10 வயது சிறுமி) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதோடு சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வழக்கைத் தானாக முன் வந்து இந்த வழக்கை (24.09.2024) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன்படி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் இந்த வழக்கை, மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றம் செய்து விசாரணை செய்ய (01.10.2024) உத்தரவிட்டது.

Advertisment

இதனையடுத்து சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்புப் புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யலாம். இதற்குத் தமிழகத்தில் பணியாற்றும் வேறு மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் 7 பேர் பட்டியலையும், அவர்கள் தொடர்பான சுருக்கமான விபரங்களையும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (18.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “வழக்கு விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து வாரம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனச் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கைத் தினந்தோறும் விசாரிக்க உயர்நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

Advertisment