Skip to main content

“அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எடுபடாது” - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 16/04/2023 | Edited on 16/04/2023

 

"Annamalai's allegations will not be accepted among the people" - Minister MRK Panneerselvam

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள பெருமாள் ஏரியை ரூ.112 கோடியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இந்த பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை  எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஏரிக்கரையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

 

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தபின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “பெருமாள் ஏரியை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. தற்போது அது நிறைவேறி உள்ளது. இந்த பணி முறையாக நடைபெறுகிறதா என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். ஏரியை மட்டும் தூர்வாராமல் இதில் உள்ள 11 பாசன வாய்க்கால்களையும் தூர்வார மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நிதி பற்றாக்குறையால் அருவாமூக்கு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள பாதிப்பு வெகுவாக குறையும். ஏரியிலிருந்து 24 லட்சம் கன மீட்டர் மண் எடுக்கப்பட்டு மூன்று இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி தாழ்வான பகுதிகளை சீர்படுத்த நல்ல வாய்ப்பு. இப்பகுதியில் ஒரு கோடி அளவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. ஏரி தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

 

இதனிடையே கடலூரில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நேர்காணல் அளித்த அளிக்கும்போது, “கடலூர் மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தில் அவசர சிகிச்சைக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் நிறுவப்படும். கடலூரில் மருத்துவக் கல்லூரி கொண்டுவர வேண்டும் என்று தான் அடிக்கல் நாட்டினோம். கடந்த கால ஆட்சியாளர்கள் கொண்டு வரவில்லை. மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கலாம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி அரசுடைமை ஆக்கப்பட்டு விட்டதால் இந்த மருத்துவக் கல்லூரி திட்டம் கைவிடப்பட்டுள்ளது. தலைமை மருத்துவமனைக்கு இட நெருக்கடி உள்ளது. இருதய நோய் சிகிச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக பணி நிரவல் காரணமாக மருத்துவர்கள் நியமிக்க வாய்ப்பு உள்ளது. இம்மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கான கட்டடம் கட்டப்பட உள்ளது" என்றார்.

 

அவரிடம் செய்தியாளர்கள் 'பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க மீது குற்றச்சாட்டுகள் வைத்துள்ளாரரே...' என்று கேட்டதற்கு " அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எடுபடாது. அண்ணாமலை கூறுவது பொய் என்று மக்கள் உணர்ந்துள்ளனர்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்