Skip to main content

திருநங்கையின் டாக்டர் கனவு; அனுமதி மறுத்த அண்ணாமலை பல்கலைக்கழகம்

Published on 14/12/2022 | Edited on 15/12/2022

 

Annamalai university transgender issue cpm

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு தலைமையில் சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் மற்றும் திருநங்கை ரக்ஷிதா ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

 

கடலூர் கோண்டூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரக்ஷிதா அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பயில இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வேதியியல் துறைத் தலைவர் ஜெயபாரதி நீங்கள் திருநங்கை ஆதலால் உங்களுக்கு கைடு (வழிகாட்டி ஆசிரியர்)  கிடைப்பது மிகவும் சிரமம். எனவே நீங்கள்  மற்ற கல்லூரியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு திருநங்கை ரக்ஷிதா, "திருநங்கைகள் முனைவர் பட்டம் பயிலக் கூடாதா?" எனக் கேட்டபோது. அவர் எதுவும் பேசாமல் நேரடியாக வந்து பேசுமாறு தொலைப்பேசியைத் துண்டித்துள்ளார். பின்னர் திருநங்கை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு வந்து பேசும்போது துறைத் தலைவர் ஜெயபாரதி சரியான பதில் அளிக்கவில்லை.

 

அப்போது  திருநங்கைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க முடியாது எனவும் நீங்களே ஒரு ஆசிரியரைத் தேர்வு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.  பின்னர் திருநங்கை இது குறித்து பல்வேறு ஆசிரியர்கள் மத்தியில் கூறினார். அப்போது ஆசிரியர் ஒருவர் இதற்கு சம்மதிக்க, அவரைத் தனது வழிகாட்டி ஆசிரியராக  திருநங்கை தேர்வு செய்துள்ளார். இதற்கு வேதியியல் துறைத் தலைவர் ஜெயபாரதி இதனைப் புறக்கணித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரக்ஷிதா, சிபிஎம் கட்சி உதவியுடன் தன்னை முனைவர் பட்டம் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட துணைவேந்தர் ராம. கதிரேசன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

 

திருநங்கைகளுக்கு என்று தமிழக அரசு தனி நல வாரியம் தொடங்கி அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு போன்ற நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி  உள்ளது. பல்வேறு அடித்தட்டு ஏழை  மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய இந்தப் பல்கலைக்கழகத்தில் திருநங்கை என்பதால் ரக்ஷிதாவை முனைவர் பட்டம் பயில புறக்கணிப்பு செய்வது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.