Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கக் கோரி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! 

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Annamalai University students struggle to call for certificate verification!

 

தமிழக தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 307 பேருக்கும், உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 122 பேருக்கும் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அரசு அங்கிகாரம்பெற்ற விவசாய கல்லூரியில் பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும். கோவை வேளாண் கல்லூரி, திண்டுக்கல் காந்தி கிராம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்தப் பணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக விவசாய துறையில் கல்வி பயின்ற மாணவர்களால் விண்ணப்பிக்க முடியாமல் இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் குமரவேல் உள்ளிட்டவர்கள் அப்போதைய துணைவேந்தர் முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க தமிழக தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்தனர். அதன்பேரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக விவசாய துறையில் பட்டயப் படிப்பு பயின்ற மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர்.

 

இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த செப் 23-ஆம் தேதி வெளியானது. இதில் பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு எழுதிய 180-க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக வரும் 8 மற்றும் 9ஆம் தேதிக்கு கோவை வேளாண் மற்றும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. 

 

அதனால், வெள்ளிக்கிழமை  (3ஆம் தேதி) அன்று தமிழக தேர்வாணய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து தமிழக தேர்வாணையத்தில் வேளாண் அலுவலர் பணிக்கு வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் லெனின் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் கதிரேசன், சிண்டிகேட் உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் அரசிடம் பேசி இது குறித்து முடிவு எடுப்பதாக உறுதிகூறியுள்ளனர்.

 

சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சரியான முடிவு வரும் வரை மாணவர்கள் இரவு பகல் என தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்