
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்கலைக்கழகத்தில் இருந்து அயர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஊழியர்களை உடனடியாக பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தவும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பயன்கள், பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு பகல் பாராமல் கடந்த 38 நாட்களாக கோரிக்கைகள் தொடர்பான நியாயத்தை எடுத்துரைப்பதற்கு உயர் கல்வித்துறை, பல்கலைக்கழக நிர்வாகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு முத்தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டித் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 38-வது நாளான சனிக்கிழமையென்று சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமையில் ஒருங்கிணைந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
முன்னதாக கஞ்சி தொட்டி முனையில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ்ஒளி, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லிகா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் குறித்தும் கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து பேசினார்கள்.