/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annamalai_18.jpg)
அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நலச்சங்கத்தினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து தமிழக அரசின் அலுவலகத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் குமரவேல், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் முருகன், வேல்ராஜ், யாதவ்சிங், வாணி ராஜன், முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தது போல் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்றும்,முந்தைய தமிழக அரசின் முறையற்ற பணிநிரவலால் பாதிக்கப்பட்டு இந்நாள் வரை அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள், பெண் ஊழியர்கள் எனப் பணிநிரவல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அடையாளம் காணப்பட்ட 800 ஊழியர்களை மட்டுமாவது அவர்களின் ஒப்பந்த நிபந்தனைப்படி அண்ணாமலைப் பல்கலைக்கழக பணிக்குச் சுழற்சி முறையில் அழைக்க வேண்டும், முந்தையை அரசின் முறையற்ற பணி நிரவலால் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உயிர் துறந்த ஊழியர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருக்கு குறைந்தப்பட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்திற்கு தற்காலிக பணியாவது வழங்கி அக்குடும்பத்தின் வறுமைநிலையை போக்கி அவர்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனைத்தொடர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தை ஊர்வலமாகச் சென்று அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கதிரேசனிடம் வழங்கினார்கள். மனுவைப் பெற்றவர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி கூறினார். இதனை ஏற்று ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)