ADVERTISEMENT

"திராவிட கொள்கைகளை வளர்ப்பதில் இந்த பல்கலை., தலைமையிடமாக செயல்பட்டது.." - அமைச்சர் பொன்முடி நெகிழ்ச்சி!

06:17 PM Mar 28, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் உயர் கல்வித்துறை அறக்கட்டளை ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் உழவர் தினவிழா என இருபெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் தலைமை தாங்கினார். பதிவாளர் சீதாராமன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில், " இந்த பல்கலைக்கழகம் தமிழ், இசை, கலைகளை வளர்த்ததும் மட்டுமல்லாமல் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை வளர்த்ததில் தலைமையிடமாகச் செயல்பட்டது. அதன் மூலமாக திராவிடக் கொள்கையைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு இந்த பல்கலைக்கழகத்தில் கிடைத்தது.

பெரியார், அம்பேத்கருடைய கொள்கைகளை வளர்த்து சமுதாய உணர்வுடன் மாணவர்களை வளர்த்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் எண்ணற்ற உயர் பதவிகளை வகித்துள்ளனர். தற்போது பதவிகளில் உள்ளனர். அதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றுபட்ட தஞ்சை, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை மக்களுக்குக் கல்வியறிவு வளர்த்த ஒரே பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தான். தமிழக முதல்வர் உயர் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் எனத் திட்டங்களை வகுத்துள்ளார்.

அதனையொட்டி தான் தற்போது துபாய்க்குச் சென்று வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக விவசாய துறையில் விவசாயிகளுக்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பத்தில் எளிய முறையில் கருவிகளைக் கண்டறிய வேண்டும். மாணவர்கள் கல்வியுடன் தொழிற்கல்வியையும் சேர்ந்து கற்க வேண்டும். கல்லூரிகளில் உள்ள என்சிசி அமைப்புகளில் இந்தியில் உள்ள கமெண்டுகளை அகற்றி ஆங்கிலத்தில் மாணவர்களுக்குக் கூற வேண்டுமென அனைத்து கல்லூரிகளிலும் வேண்டுகோளாக வைத்து வருகிறேன். எனவே அதனைப் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றிப் பேசுகையில், " கடந்த காலத்தில் செய்த பல்வேறு குளறுபடிகளால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை இந்த அரசு சரிசெய்து வருகிறது. அனைத்தும் சரிசெய்யப்படும். பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அறிவியல் துறை பல்வேறு புதிய வேளாண் திட்டங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். விவசாயிகள் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி புதிய தொழில்நுட்பத்துடன் விற்பனை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். புதிய நெல் ரகங்களை உருவாக்க வேண்டும். தற்போது பல்கலைக்கழகத்தில் கூட்டுப்பண்ணையம் முறையில் ஒரே இடத்தில் நெல் கோழி, மீன் வளர்ப்பு குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது இது வரவேற்கத்தக்கது" என்று அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து உயர் கல்வித்துறை அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் ஒழுக்கம், விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு விதமான வகையில் தேர்வு செய்யப்பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய சிகப்பி நெல் தலா 5 கிலோ, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பல்கலைக்கழக வேளாண்துறைத் தலைவர் சுந்தரவரதராஜன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT