Annamalai speech at avinasi to crictize dmk government

Advertisment

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் துவங்கி இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை என பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிறைவு செய்திருந்தார். அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் நேற்று (16-10-23) தொடங்கினார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடைப்பயணத்துக்கு இடையே பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “தாய்மார்களின் இரும்புக்கோட்டையாக பா.ஜ.க இருக்கிறது. பெண்களின் வாக்கு பா.ஜ.க.வுக்கு அதிகமாக இருக்கிறது. திமுக அரசு, இந்து சம்பிரதாயங்களை அழித்து விட்டு கோவில் திருட்டுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. 2 லட்சம் கோவில் நிலம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.

Advertisment

சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி சொன்னார். அதற்கு பதிலடியாக வருகிற 2024ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசை கவிழ்த்து இருக்கின்ற இடமில்லாமல் மக்களாகிய நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.