Skip to main content

அண்ணாமலையைக் கைது செய்ய வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு டி.ஜி.பி.யிடம் புகார்!

Published on 18/04/2022 | Edited on 19/04/2022

 

dfg

 

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தமிழக மாநில செயலாளர் நாகுர்மீரான் மற்றும் அந்த அமைப்பின் சென்னை நிர்வாகிகள் தமிழக காவல்துறை தலைவரான டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை இன்று சந்தித்துள்ளனர் . அந்த சந்திப்பின் போது, தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த புகாரில், "இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிரான,  வெளிப்படையான இனப்படுகொலை அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் என பல மாநிலங்களில் ராம நவமி கொண்டாட்டம் என்ற பெயரில் ஊர்வலமாக சென்று முஸ்லிம்களின் வழிபாட்டு தளங்கள், வீடுகள், வியாபார ஸ்தலங்கள் தீ வைக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி மாநிலத்தில் மத பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழகம் என்றும் போல் இன்றும் நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கி வரும் நிலையில். அதற்கு கேடு ஏற்படுத்தும் வகையில் சமீபகால சில நிகழ்வுகள் நடந்து வருகின்றது. திருவள்ளூர் மாவட்ட மதுரவாயலில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது காருக்கு தானே தீயிட்டு பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளார். இது போல சில மாதங்களுக்கு முன் மைக்கேல்பட்டி மாணவி தற்கொலையை திரித்து அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைய முயற்சித்தனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு நிகழ்வாக எடுத்து பிரச்சனைகளை உருவாக்கி தமிழகத்தில் அமைதி, நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

 இந்நிலையில் சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ தமிழகத்தில் பாஜக ஒரு சதிச்செயலை திட்டமிடுகிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. அந்த ஆடியோவில் அண்ணாமலை அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து பல்வேறு அவதூறுகள், ஆதாரமற்ற தகவல்களை பரப்பியதுடன், பாஜக தலைவர்களின் உயிர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினரால் ஆபத்து உள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளங்கி இருந்தும் பெரிய அளவிலான மோதலை உருவாக்க வேண்டும்.  அதன் மூலம் தமிழகத்தை வட இந்தியா போல் ஒரு மத பதற்றம் நிறைந்த கொதி நிலை மிக்க மாநிலமாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்பது தெரியவருகிறது.  

 

இதுபோன்ற பொய்யான ஆடியோவை பரப்பி தமிழகத்தில் கலவரத்தைப் பரப்ப சதி செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. தங்களின் வீடு, வாகனங்களை தாங்களே தாக்கிக் கொண்டு மத பதற்றத்தை ஏற்படுத்துவதை வழிமுறையாக கொண்டவர்கள் தமிழகத்தின் அமைதி, நல்லிணக்கத்தை கெடுக்க வேறு ஏதேனும் சதி செய்கிறார்களா என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். அதற்கு பொய்யான ஆடியோவை பரப்பிய அண்ணாமலையை கைது செய்து  தமிழக அரசு விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்" என்று டி.ஜி.பி.யிடம்  கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருக்கிறார் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் நாகூர் மீரான் . பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மண்டல செயலாளர் ஃபக்கீர் முஹம்மது மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்