Annamalai says Thirukkural today has been translated into many languages ​​of the world due to the diligent efforts of the Prime Minister

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்படவிருக்கிறது. அந்த வகையில் பொங்கல் தின விழாவையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, காவி உடை அணிந்திருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர், ‘வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியப்பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுஉலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்றுத்திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment