Annamalai says DMK should apologize to the people of Tamil Nadu

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டி நேற்று (23-10-23) நடைபெற்றது. இதில், பாகிஸ்தான்மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதற்காக ரசிகர்கள் நேற்று பிற்பகல் வேளையில் மைதானத்திற்கு வருகை தந்தனர். வருகை தந்த ரசிகர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

அப்போது ரசிகர் ஒருவர் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், அந்த ரசிகரிடம் இருந்து தேசியக் கொடியை பிடுங்கி அதனை குப்பைத் தொட்டியில் போட முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்த உதவி ஆய்வாளர் தேசியக் கொடியை கையில் வைத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனையடுத்து, தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் வீச முயன்ற உதவி ஆய்வாளரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது,”குஜராத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதே போல், திமுக அமைச்சர் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் அசோக் சிகாமணி, தனது அரசியல் பிரச்சாரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று இன்று நமது நாட்டின் தேசியக் கொடியை அவமதித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் இன்றைய (நேற்று) போட்டிக்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?. இந்திய தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும், தமிழ்நாட்டு மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒருவேளை தவறினால், மூவர்ண கொடியின் கண்ணியத்தை காக்க தவறிய திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பா.ஜ.க தள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.