Annamalai regrets his speech!

தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி காலமாகிவிட்டதாகப் பேசியதற்காக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisment

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி கூறியதாக ஒரு தகவலை சொல்லும் முன், அவர் இறைவனடிச் சேர்ந்து விட்டதாகக் குறிப்பிட்டார். 85 வயதான ஆற்காடு வீராசாமி உயிருடன் இருக்கும் நிலையில், அண்ணாமலைப் பேசியதன் உண்மைத் தன்மை அறியாமல் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதற்கு ஆற்காடு வீராசாமியின் மகனும், வடசென்னை தி.மு.க. எம்.பி.யுமான கலாநிதி வீராசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

Advertisment

இது குறித்து கலாநிதி வீராசாமி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் அண்ணாமலை, இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தனது பேச்சுக்காக வருந்துவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "டாக்டர் உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.