/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_148.jpg)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவின் எம்.பிக்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள் என 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியது. இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர்கள் கூறினர்.வேண்டுமானால் வழக்கு தொடருங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என்று அண்ணாமலை கூற, டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, கனிமொழி உள்ளிட்ட திமுகவின் முக்கியத்தலைவர்கள் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர். பாலு எம்.பி தொடர்ந்த வழக்கு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அண்ணாமலை நேரில் ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாம் வெளியிட்ட திமுக ஃபைல்ஸ் அக்கட்சியினரை கடுமையாக கோவப்படுத்தியுள்ளது. அதனால் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவை சேர்ந்தவர்கள் 1000 கோடி ரூபாய்க்கும் மேலாக நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர். அப்படி அவதூறு வழக்கு தொடுத்தவரில் டி.ஆர். பாலுவின் வழக்கு விசாரணைக்கு ஆஜரானோம். இது பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதைத்தான் காட்டுகிறது. வாய்ப் பேச்சாக இல்லாமல், அறிக்கையாக இல்லாமல் நீதிமன்றத்திலேயே அதனை சந்திக்க வந்திருக்கிறோம்.
ஏற்கனவே டி.ஆர். பாலு இந்த நீதிமன்றத்திற்கு வந்து சத்திய பிரமாணம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அந்த சத்திய பிரமாணத்தில் அவர் கொடுத்துள்ள தகவலிலேயே பொய்கள் இருக்கிறது. டி.ஆர். பாலு 2004 முதல் 2009 வரை ஊழல்செய்ததால்தான் அவருக்கு அடுத்த அமைச்சரவையில் இடமில்லை. அதைத்தான் நான் கூறினேன். அதையும் அவதூறு வழக்கில் இணைத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலைஞரின் மகனும், முன்னாள் அமைச்சருமான மு.க. அழகிரி, ‘டி.ஆர். பாலு செய்த ஊழல், எவ்வளவு பணம் வைத்திருக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் எவ்வளவு ஊழல் செய்யப் போகிறார் என்று எனக்கு தெரியும்’ என்று கூறியிருந்தார். அதே குற்றச்சாட்டைத்தான் நானும் கூறியிருந்தேன். ஆனால் இதுவரை டி.ஆர். பாலு அழகிரி மீது எந்த வழக்கும் தொடுக்கவில்லை.ஆனால் என் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)