Skip to main content

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் - விண்ணப்பிக்க அவகாசம்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

anna university vice chancellor application date extended

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். nodalofficer2021@annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான மூன்று நபர்களைத் தேர்வு செய்து தேடுதல் குழு ஆளுநரிடம் பட்டியலை அளிக்கும்.

 

கடந்த மார்ச் மாதம் தேர்வுக் குழு அமைத்து துணைவேந்தர் தேர்வு பணி நடந்து வரும் நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.