Skip to main content

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

Anna University student case verdict today

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதே சமயம் இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னை அல்லிக்குளம் பகுதியில் உள்ள மகளிர் நீதிமன்றத்திற்குக் கடந்த மார்ச்  மாதம்7 ஆம் தேதி மாற்றப்பட்டது.

மற்றொருபுறம் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் (08.04.2025) நடைபெற்றது. அப்போது நீதிபதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும் ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ஞானசேகரன் மீது குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. அதில் பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் மற்றும் மிரட்டல் போன்ற குற்றசெயலில் ஈடுபட்டதற்காகத் தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது.  அதன்படி தினம்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை சார்பில் 29 பேர் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். மேலும் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை சார்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

Anna University student case verdict today

இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தனர். அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். இவ்வாறு இருதரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று (28.05.2025) காலை 10:30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளார். மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளையும் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்