Anna University issue arrested Gnanasekaran

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் இந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் கோட்டூர்புரம் மண்டபம் பகுதியில் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட ஞானசேகரன் பற்றித் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் பகிர் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரியாணி கடையில் விற்பனை முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காட்டுப்பகுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மொபைலில் படம் பிடித்து மிரட்டி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்ட பகிர் தகவலும் வெளியாகி உள்ளது. ஞானசேகரன் மீது கடந்த 2011ஆம் ஆண்டு இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது அம்பலமாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் கைதான ஞானசேகரனுக்குக் காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஞானசேகரனைப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய ஞானசேகரன் கீழே விழுந்ததில் இடது கை மற்றும் இடது கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் மாவுக்கட்டு போட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.