/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna-university_2.jpg)
பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாததால், செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலத்தில் உள்ள இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை நிறுத்தி வைத்து, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், 2020-21ம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து, அகில இந்திய தொழில்நுட்பகல்விக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து, கல்லூரிகள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக விதிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டது எனக் கூறி, பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இரு கல்லூரிகளுக்கும் புதிதாக நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுக்கள்,தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக, கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும், சட்டப்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் விதிகளின்படியே, தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரு கல்லூரிகளின் மனுக்கள் மீது, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பல்கலைக்கழக இணைப்பு நிறுத்திவைப்பு உத்தரவை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.
Follow Us