Skip to main content

ஆளுநர் நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலை. இட்ட உத்தரவால் சர்ச்சை; துணை வேந்தர் விளக்கம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Anna University for Governor Program. Controversy by Order

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா நேற்று (23-01-24) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். 

இவ்விழாவின் பார்வையாளர்களாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆளுநர் விழாவில் அதிக மாணவர்களைப் பங்கேற்க செய்யும் வகையில் விழா அரங்கிலேயே வருகைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரங்கிற்கு உள்ளே சென்று விழாவிற்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு கொடுக்கப்படும் படி அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 

இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “400 மாணவர்கள் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு 2 மணி நேரப் பாட வகுப்புகளை ரத்து செய்து வரவழைத்தோம். மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை எடுத்துச் சொல்ல இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதில் எந்த தவறும் இல்லை. இடம் அதிகம் இருந்திருந்தால் அனைத்து மாணவர்களையும் அழைத்து பங்கேற்க செய்திருப்போம். இதுபோன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். 

வருகைப் பதிவை நிகழ்ச்சியில் எடுத்தால் தான், அவர்கள் கலந்து கொண்டது உறுதி செய்யப்படும். இல்லையென்றால், இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் வெளியே எங்கேயாவது சென்று விடுவார்கள். இதனால் தான், நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப்பதிவு என்று கூறப்பட்டது. தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் எந்த தவறும் இல்லை. இதுவும் ஒரு கற்பித்தல் நிகழ்ச்சி தான்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இஸ்லாமியர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்...” - மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nion Minister's giriraj singh Controversial Speech

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் மூன்றாவது முறை மத்திய அமைச்சராக கிரிராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் பதவி வகித்த் வருகிறார். 

இவர் கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான போது, இஸ்லாமியர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் அவர்களுக்கு நான் பணியாற்றப் போவதில்லை என்று சர்ச்சையாக பேசினார். மேலும் அவர் கூறியதாவது, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்கள் மீது ஒருபோதும் பாரபட்சம் காட்டவில்லை என்றாலும் எங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க அவர்கள் வழிவகுத்துவிட்டனர்’ எனப் பேசினார். இவரது பேச்சு அப்போது பெரும் சர்ச்சையாக மாறியது. 

இந்த நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், இஸ்லாமியர்கள் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “இது இந்த நாட்டின் துரதிஷ்டம். 1947-ல் பாகிஸ்தான் மத அடிப்படையில் பிரிந்தபோது அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், இதுபோன்ற கேள்விகளை யாரும் எழுப்பியிருக்க முடியாது..

இஸ்லாமியர்களை இங்கு வாழ வைத்தது மிகப்பெரிய தவறு. மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் ஏன் இங்கு இருக்க அனுமதித்தார்கள்? அவர்கள் இங்கு வாழ அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது” எனப் பேசினார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. 

Next Story

சர்ச்சைகளில் சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் குடும்பம்; பூஜாவின் தாயார் அதிரடி கைது!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
IAS officer's family embroiled in controversies and Pooja's mother arrested

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக்  கூறப்பட்டது. மேலும்,  புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், ஓய்வு பெற்ற மகாராஷ்டிரா அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை திலீப் கேத்கர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. பூஜா கேட்கர் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. 

இதனையடுத்து, பூஜா கேட்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, சாலையோர நடைபாதையை பூஜாவின் குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, புனே நகராட்சி சார்பில் அனுப்பிய நோட்டீஸூக்கு பூஜாவின் குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால் புல்டோசர் மீது பூஜாவின் ஆக்கிரமிப்பு தடுப்புச்சுவர் நேற்று இடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை போலீசார் கைது செய்துள்ளனர். நில விவகாரம் தொடர்பாக, புனே மாவட்டம் தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை, மனோரமா கேட்கர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது.  இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே போலீசார், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை கைது செய்துள்ளனர்.