anna university chennai high court order

அண்ணா பல்கலைக்கழகத்தில், இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து, நாளை (03/02/2021) விளக்கமளிக்கும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும், இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதை எதிர்த்து, இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

Advertisment

அந்த மனுவில்,‘உயிரி தொழில்நுட்பவியல் துறை, இந்தியாவிலேயே முதன் முதலில், 1986- ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்குப் பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்ப்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில்இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது. எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

anna university chennai high court order

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, தற்போது பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பில், மாநில அளவிலான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றலாம் எனக் கூறியுள்ளதாகவும், படிப்புகளை ரத்து செய்துள்ளதால், 45 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது குறித்த விளக்கத்தைக் கேட்டு தெரிவிப்பதாக பல்கலைக்கழகம் தரப்பிலும், அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் திடீரென ரத்து செய்தது ஏன்? என நாளை (03/02/2021) எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்துள்ளார்.