/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna 444_0.jpg)
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்என அண்ணா பல்கலைக்கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததை எதிர்த்து, இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்குப் பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020- 2021 ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c33333_5.jpg)
எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிடக் கோரிய இந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இரு எம்.டெக் படிப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும். எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டோடு சேர்த்து, மாநில அரசினுடைய இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தி, படிப்பைத் தொடர்ந்து நடத்த மேலும் 9 இடங்களை உருவாக்குவதற்கான அனுமதி தேவை’என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழக்கறிஞர், மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் ஒப்புதல் தேவையில்லை எனவும், இடஒதுக்கீட்டுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலுக்கும் தொடர்பில்லை என விளக்கமளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுசம்பந்தமாக எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)