
அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தேதியை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் இருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''திருந்து திருந்து என்று சொல்கிறோம். நாங்கள் திருந்தமாட்டோம். இப்படித்தான் மூர்க்கத்தனமாக இருப்போம் என்று சொல்கிறார்கள். அறிஞர் அண்ணா இப்படியா கட்சி நடத்தினார். எம்ஜிஆர் இப்படியா கட்சி நடத்தினார். ஜெயலலிதா இப்படியா கட்சி நடத்தினார். அதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு 66,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வி பெறுகிறது என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர் பொறுப்பேற்று நான் தான் முதலமைச்சர்; நான் தான் எல்லா வேட்பாளரையும் தேர்வு பண்ணுவேன்; உள்ளாட்சித் தேர்தல்; சட்டமன்ற தேர்தல்; நாடாளுமன்ற தேர்தல் எல்லாவற்றையும் நானே முடிவு செய்வேன் என்றார்.
எங்கள் தொகுதியில் கூட அதாவது தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர மற்றவர்கள் எல்லாரையும் அவர்களே போட்டார்கள். 39 இடத்தில் போட்டியிட்டு ஒரே இடத்தில் மட்டும் தான் ஜெயித்தோம். நாட்டு மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். அதனால் தான் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான தீர்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் எங்கு போனாலும் எதிர்ப்பு அலை அவரை நோக்கிப் பாயும். அந்த நிலை உருவாகி இருக்கிறது. அதை நாங்கள் உருவாக்கவில்லை அவரே உருவாக்கிக் கொள்கிறார். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவருக்கு எதிராக உருவாகி இருக்கும் எதிர்ப்பு அலை அவரால் உருவாக்கப்பட்டது'' என்றார்.