Skip to main content

ஆண்மைக்குறைவா? குழந்தையின்மையா? பெருகும் போலி டாக்டர்கள்…சிக்கும் ‘நிழல்’ பதிவாளர்!

ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பதாக சொல்லிக்கொண்டு ஒரிஜினல் டாக்டர்களைவிட போலி டாக்டர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்தரங்க பிரச்சனைகள் என்பதால் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்களும் புகார் கொடுப்பதில்லை. அப்படியே கண்டுபிடித்து, கைது செய்தாலும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சுகாதாரத்துறையிலுள்ள சில அதிகாரிகளின் துணையால் ஈஸியாக தப்பித்து… மீண்டும் தங்களது போலி மருத்துவத்தை தொடர்கிறார்கள். சமீபத்தில், போலி டாக்டர்கள் மீது புகார் கொடுத்த ஒரிஜினல் டாக்டரே ஆளுங்கட்சி புள்ளிகளால் மிரட்டப்பட்ட சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, நாம் தோண்ட ஆரம்பித்தபோதுதான் தினம் தினம் தொலைக்காட்சி ஊடகங்களில் தோன்றி மருத்துவ ஆலோசகளை சொல்லிக்கொண்டிருக்கும்  பெரும்பாலானவர்கள் போலிடாக்டர்கள் என்கிற அதிர்ச்சித்தகவல் வெளியாகிறது.

 

FAKE DOCTOR PALANI

 

ஒரிஜினல் டாக்டரை மிரட்டிய பிரபல போலிடாக்டர்!

 

மிரட்டப்பட்ட பிரபல டாக்டர் மெர்சி ஃப்ளாரன்ஸின் கணவர் கோயில்தாஸ் நம்மிடம், “கடந்த, 2018 அக்டோபர் 9 தேதி மதியம் 2.30 மணிக்கு வந்த ஃபோன் காலில் பேசிய நபர், டாக்டர் மெர்சி ஃப்ளாரன்ஸிடம் பேசவேண்டும் என்றதோடு மிகவும் ஆபாசமான சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டார். ஆரம்பத்தில், யாரோ நோயாளிதான் சந்தேகம் கேட்கிறார் என்று நினைத்த எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே, அந்த செல் நம்பரை ட்ரூ காலரில் போட்டு தேடிப்பார்த்தபோது ‘டாக்டர் பழனி’ என்று வந்தது. உடனே, யு-ட்யூபில் போட்டு அவரது வீடியோக்களைப் பார்த்தபோது ஃபோனில் பேசிய குரலும் வீடியோவில் பேசிய குரலும் ஒன்றாக இருந்தது.

 

FAKE DOCTOR LAKSHMI

 

அதற்குப்பிறகு, மீண்டும் அதேபோல் இரவுநேரத்தில் வந்த வேறொரு செல்நம்பரையும் பரிசோதித்தபோது  ‘லட்சுமி ஆயில்  ஹெர்பல் கேர்’ என்று ட்ரூ காலர் காண்பித்தது. சந்தேகமே இல்லை.தொலைக்காட்சியில் ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சியில் பேசும் பழனிதான் என் மனைவியை தொடர்ந்து ஃபோனில் ஆபாசமாகவும் ‘க்ளினிக் நடத்துக்கூடாது’ என்றும் மிரட்டிவருகிறார் என்பது உறுதியானது. காரணம், லட்சுமி வேறு யாருமல்ல… பழனியின் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டாக வேலைபார்த்துவந்தவர். இவரும் ஒரு போலி டாக்டர்தான். இப்போது, தனியாக க்ளினிக் வைத்திருப்பதோடு இவர் யாராக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது பழனிக்கும் அவரைச்சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும் என்பது தனிக்கதை.

 

koyildoss

 

கட்டப்பஞ்சாயத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா!

 

எந்தவிதமான முறையான மருத்துவப்படிப்பையும் முடிக்காதவர் போலி டாக்டர் பழனி. ஆனால், முறைப்படி பி.எஸ்.எம்.எஸ். எனப்படும் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு முடித்து சித்த மருத்துவக் கவுன்சிலில் பதிவுசெய்த  ’ஏ’ க்ளாஸ் டாக்டரான என் மனைவியை மருத்துவமனை நடத்தக்கூடாது என்று மிரட்டுவதா? என்று காவல்துறைக்கு ஆன்லைனில் புகார் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து விசாரித்த பாண்டிபஜார்  இன்ஸ்பெக்டர் சீனிவாசனோ, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா அனுப்பிவைத்த அதிமுக பகுதிசெயலாளர் உதயா உள்ளிட்டவர்களின் பேச்சைக்கேட்டுக்கொண்டு ‘உன் மனைவிதான் போலி டாக்டர்… போயி உன் மனைவியோட சர்டிஃபிகேட்டை எல்லாம் எடுத்துட்டு வா’ என்று மரியாதை இல்லாமல் விரட்டினார். கொண்டுவந்து கொடுத்தபிறகும்கூட போலி டாக்டர்களான பழனி மற்றும் லட்சுமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்ஸ்பெக்டர் சீனிவாசன். ஆனால்,சில நாட்கள் கழித்து  ‘ஓ.பி.எஸ். பையனோட ஃப்ரண்டு பேசுறேன்’ என்று மீண்டும் ஒரு இரவு நேரத்தில் 63858 93453 என்ற செல்நம்பரிலிருந்து ஃபோன்கால் வந்தது. அப்போது, பேசிய நபர் உன் க்ளினிக்கை அடித்து உடைத்துவிடுவோம்.

 

MLA SATHYA

 

எந்த ஸ்டேஷன்ல வேணும்னாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ’ என்றதுடன் என் மனைவியை மிகவும் அசிங்க அசிங்கமாகவும் கேவலமாகவும் பேசி மிரட்டினார். இதுவும், போலி டாக்டர் பழனியின் வேலையாகத்தான் இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன். ஆளுங்கட்சி அரசியல் புள்ளிகளின் உதவியால் போலி டாக்டர்கள் ஒரிஜினல் டாக்டர்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். காவல்துறையும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியிருந்தால், போலி டாக்டர்களை எப்படி ஒழித்து பொது மக்களை காப்பாற்றமுடியும்?” என்கிறார் வேதனையுடன்.

 

 

 

 ‘பேசிமுடித்த’ இன்ஸ்பெக்டர்!

 

இதுகுறித்து, இப்புக்காரின் விசாரணை அதிகாரியும் பாண்டிபஜார் எஸ்.ஐ.யுமான புஷ்பாவிடம் கேட்டபோது, “நேர்ல வாங்க… இன்ஸ்பெக்டர்தான் விசாரிச்சார்.  ஃபோன்ல சொல்லமுடியாது” என்று டென்ஷனாக ஃபோனை துண்டித்தார்.  பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் கேட்டபோது, “இரண்டு தரப்பையும் அழைத்துப்பேசி முடித்துவைத்துவிட்டேன்” என்றவரிடம்  “நடவடிக்கை எடுத்தீர்களா?” என்று கேட்டபோது, “நடவடிக்கை எடுத்துவிட்டேன்” என்றார். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று நாம் கேட்டபோது, “ஃபோன்ல சொல்லமுடியாது. நேர்ல பேசிக்கலாம்” என்றபடி ஃபோனை துண்டித்தார்.       

 

INSPECTOR SRINIVASAN

 

இதுகுறித்து, பாண்டிபஜாரிலுள்ள நியாயமான காக்கி அதிகாரி நம்மிடம், “அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யாவோட ஆட்கள் வந்து பஞ்சாயத்து பண்ணினதாலதான் ஆக்‌ஷன் எடுக்காம விட்டுட்டார் இன்ஸ்பெக்டர் சீனிவாசன். பழனியோ வழக்கம்போல போலி டாக்டர்கள் சொல்றமாதிரி ‘நான் டாக்டர் அல்ல. முறைப்படி டாக்டருக்கு படித்தவர்களை வைத்து மருத்துவமனை நடத்துகிறேன்” என்று சமாளித்து காவல்நிலையத்துக்கு விளக்கக்கடிதம் கொடுத்திருக்கிறார். இப்போது, தொடர்புகொண்டாலும் சிகிச்சை அளிப்பது, தொலைக்காட்சிகளில் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது பழனிதான். ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை போன்ற அந்தரங்க பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுக்க வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று வெளியில் சொல்வதில்லை; புகாரும் கொடுப்பதில்லை. அதையும் மீறி காவல்துறையில் புகார் கொடுத்தால் இப்படி, ஆளுங்கட்சி புள்ளிகளை வைத்து மிரட்டுவார். எப்போதும் குண்டர்களுடன்தான் இருப்பார் பழனி. டாக்டரே அல்லாமல் சிகிச்சை அளித்து தவறான ஆலோசனைகளைச் சொல்லி சம்பாதித்து தற்போது மருத்துவக்கல்லூரியே கட்ட இருக்கிறார் பழனி. எம்.எல்.ஏ. சீட்டுக்கும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இப்படிப்பட்ட பழனி மீது புகார்கொடுத்த பிறகும்கூட காவல்துறையும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை” என்கிறார் வேதனையுடன்.

 

போலி சர்டிஃபிகேட்… சிக்கும்  ‘நிழல்’ பதிவாளர்!

 

ஒரு ஹோமியோபதி போலி சான்றிதழ் 1 லட்சரூபாய்க்கு விற்கப்படுவதாக தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் முன்னாள் தலைவர் ஞானசம்பந்தம் கொடுத்த புகாரில் பலரையும் அதிரடியாக கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ். இதன், தொடர்ச்சியாக  சிக்கப்போகிறவர் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலின்  ‘நிழல்’ பதிவாளர் ஜெயக்குமார்தான் என்கிறது காவல்துறை. எம்.பி.பி.எஸ். எனப்படும் அலோபதி மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் பதிசெய்யவேண்டும்.  பி.டி.எஸ். எனப்படும் பல்மருத்துவர்கள் பல் மருத்துவக்கவுன்சிலில் பதிவுசெய்யவேண்டும். அதேபோல், ‘ஆயுஷ்’ எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி ஆகிய ஐந்துவிதமான இந்திய மருத்துவர்கள் பதிவுசெய்துகொள்ளும் இடம்தான் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகம். ஹோமியோபதிக்கும் அதே வளாகத்தில் தனி கவுன்சில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரவர்கள், என்னென்ன மருத்துவம் படித்தார்களோ அதற்கான கவுன்சிலில் பதிவுசெய்திருந்தால் மட்டுமே  மருத்துவ சிகிச்சை அளிக்கமுடியும்.

 

ஆக, சென்னை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்திலுள்ள தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தின் உண்மையான பதிவாளர் ராஜசேகராக இருந்தாலும் ஆல் இன் ஆல் பதிவாளரைப்போல் ம்ஹூம் பதிவாளருக்கும் மேலாக செயல்படுவது ஜெயக்குமார்தான் என்கிறார்கள்.

 

JAYAKUMAR

 

யார் இந்த ஜெயக்குமார்? என்று விசாரணையில் இறங்கினோம்.“ஓலைச்சுவடி பிரிவில் பணியாற்றிய போஸ் என்பவரின் உறவினரான ஜெயக்குமார் அவரது சிபாரிசில்  ஆஃபிஸ் அஸிஸ்டெண்டாக சேர்ந்து கடந்த பத்து வருடங்களுக்குமேலாக தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தின் உதவியாளராக இருக்கிறார்.  2009-ல்  திருக்குமார் என்ற உதவியாளர் அரசின் ரப்பர் ஸ்டாம்புகளை வீட்டிற்கே எடுத்துச்சென்று போலிச்சான்றிதழ்களை அச்சடித்து வினியோகித்தார் என்று பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது. அப்போது, அவருக்கு துணையாக செயல்பட்டவர் ஜெயக்குமார்தான். ஆனால், போலிச்சான்றிதழ் விவகாரம் வெடிக்க ஆரம்பித்ததும் உதவியாளர் திருக்குமார் தற்கொலை செய்துகொண்டார். அப்போதைய, பதிவாளர் சாய்பிரசாத் கட்டாய பணிவிடுப்பில் சென்றுவிட்டார். அதனால், அப்போதே சிக்கவேண்டிய ஜெயக்குமர் தப்பித்துவிட்டார். திருக்குமாரின் மறைவால் போலிச்சான்றிதழ் விவகாரமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது. அந்த போலிச்சான்றிதழ்கள் மட்டுமல்ல, இப்போதும் புதிய போலிச்சான்றிதழ்கள் உலாவிக்கொண்டிருக்கிறன.

 

fake

 

அதிலும், ஜெயக்குமாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று விசாரிக்கப்படவேண்டும். போலி டாக்டர்கள் குறித்து புகார் கொடுத்தால் அந்த தகவல் ஜெயக்குமார் மூலம்  போலி டாக்டர்களுக்கு சென்றுவிடும். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகள் அனுப்பினால்கூட போலி டாக்டர்களை காப்பாற்றும் விதமாக பதில் கொடுப்பவரும் ஜெயக்குமார்தான். வருகின்ற கடிதங்களை பெறுவது… கடிதங்களை அனுப்புவதுதான் இவரது வேலை என்றாலும் பதிவுசெய்ய வரும் ஆயுஷ் மருத்துவர்களோ அல்லது புகார் கொடுக்கவருகிறவர்களோ யாராக இருந்தாலும் ஜெயக்குமார் மனதுவைக்காமல் பதிவாளரை சந்திக்கமுடியாது. எந்த புகாராக இருந்தாலும்  பதிவாளர் உள்ளே இருந்தாலும்கூட ‘அவரை சந்திக்கமுடியாது  எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்’ என்று அனைவரையும் மிரட்டல் தொனியில்தான் பேசுவார்.

 

 

யார் வந்தாலும் மதிக்கமாட்டார். பதிவுசெய்யவரும் டாக்டர்களைக்கூட மிரட்டுவார். பல வருடங்களுக்குமேலாக அதே இடத்தில் பணிபுரிவதாலும் போலி மருத்துவவர்கள் மற்றும் ஆளுங்கட்சி  அரசியல்வாதிகளின் செல்வாக்காலும் அங்கு வரும் பதிவாளர்களே ஜெயக்குமாரை பார்த்து அச்சப்படுகிறார்கள். அதேபோல், போலி டாக்டர்கள் மீது புகார் கொடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக  ‘எச்சரித்து அனுப்புகிறேன்’ என்று பதிவாளர் தொனியில் ஜெயக்குமார் சொல்வார். இவரைப்பிடித்து விசாரித்தாலே தமிழகத்திலுள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போலி மருத்துவர்கள் யார் யார்? போலிச்சான்றிதழ்களை அச்சடிப்பது யார் யார்? என்ற ஏ டூ செட் உண்மைகளும் வெளிவந்துவிடும். இவரை, இந்த இடத்திலிருந்து மாற்றினாலே போலி டாக்டர்கள் உருவாகமாட்டார்கள்” என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள்.

 

 

 

டிவியில் பேசுபவர்கள் பெரும்பாலும் போலி டாக்டர்களே!

 

RAJASEKARAN

 

இதுகுறித்து, தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தின் பதிவாளர் ராஜசேகரிடம் நாம் பேசியபோது, “டிவியில் பேசக்கூடிய  ஸ்ரீ அருணாச்சலேஸ்வரா சித்தா அண்ட் ஆயுர்வேத வைத்தியசாலையின் உரிமையாளர் பழனி என்பவர் போலி மருத்துவர்தான். அதேபோல்,  ‘லட்சுமி ஹெர்பல் கேர்’ லட்சுமியும் போலி டாக்டர்தான். அவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது. இப்படி, டிவியில் பேசக்கூடிய பெரும்பாலான டாக்டர்கள் போலி டாக்டர்கள்தான். அவர்களிடம், பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட, போலி டாக்டர்களை நிர்வாக இயக்குனராக கொண்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒரிஜினல் டாக்டர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகளை வழங்கக்கூடாது என்று ட்ராய் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஆனாலும். தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். போலி மருத்துவர்கள் மாநாடுகள் நடத்தவும் அனுமதியில்லை.

 

COUNCIL

 

சித்தா (Bachelor of Siddha Medicine & Surgery)

ஆயுர்வேதா (Bachelor of Ayurvedic Medicine and Surgery)

யுனானி (Bachelor in Unani Medicine and Surgery)

ஹோமியோபதி (Bachelor of Homeopathic Medicine and Surgery) 

நேச்சுரோபதி அண்ட் யோகா (Bachelor of Naturopathy and Yogic Sciences)

 

ஆகிய இந்திய மருத்துவம் படிக்காமலேயே படித்ததுபோல் பட்டங்களைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிப்பவர்கள் போலி மருத்துவர்கள்.  இதில், இந்திய மருத்துவப்படிப்புகளை படித்துவிட்டு தொடர்ந்து அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் குற்றம்.

 

பட்டப்படிப்பு படிக்காத சித்தா- ஆயுர்வேதா- யுனானி பரம்பரை வைத்தியர்களும் எங்களிடம் பதிவு செய்திருந்தால் மட்டுமே மருத்துவம் பார்க்கமுடியும். பரம்பரை வைத்தியர்களுக்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்படவில்லை. அதேபோல், வெளிமாநிலங்களில் பரம்பரை வைத்தியர்களுக்கான படிப்பை முடித்திருந்தாலும்கூட தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தில் பதிவுசெய்திருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களும் போலி மருத்துவர்கள்தான். நீங்கள் சிகிச்சைக்கு செல்லும்  ‘ஆயுஷ்’ டாக்டர் ஒரிஜினல் டாக்டரா? போலி டாக்டரா? என்பதை அறிந்துகொள்ள தமிழ்நாடு சித்தா மெடிக்கல் கவுன்சிலின் www.tnsmc.com என்ற வெப்ஸைட்டில் சென்று பார்த்தால் INFORMATION DESK என்று வரும். அதில், DOCTOR’S SEARCH என்று வரும். அதை, க்ளில் செய்தால்  Registration No கேட்கும். சம்பந்தப்பட்ட டாக்டரின் பதிவு எண்ணை பதிவு செய்துவிட்டு System of Medicine (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி) என்ன என்று குறிப்பிடவேண்டும். Class என்ற இடத்தில் பட்டதாரி மருத்துவராக இருந்தால் ‘ஏ’ வையும் பரம்பரை வைத்தியர்களாக இருந்தால்  ‘பி’ அண்ட்  ‘சி’ யையும் என்லிஸ்ட்மெண்ட் எனப்படும் அட்டவணைப்பட்டியலில் இருந்தால் Enlistment என்றும் Search செய்தால் புகைப்படத்துடன் கூடிய டாக்டரின் விவரங்கள் வரும். அப்படி, வரவில்லை என்றால் அவர் போலி மருத்துவர் என்று அர்த்தம்” என்றவர் “போலிச்சான்றிதழ்கள் உலாவிக்கொண்டிருப்பது உண்மைதான். உதவியாளர் ஜெயக்குமாருக்கு அதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து நிரூபிக்கப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

 

 

 

தமிழ் மருத்துவத்தை சீரழிக்கும் போலி மருத்துவர்கள்!

 

   

DOCTOR VEERABHABU

 

இதுகுறித்து,  பிரபல ‘தழை வேர்’  சித்த மருத்துவமனையின் உரிமையாளரும் சித்த மருத்துவருமான வீரபாபு நம்மிடம், “உண்மையான பரம்பரை மருத்துவர்களால்தான் இந்திய மருத்துவமுறையே உருவாக்க்கப்பட்டது. ஆனால், பரம்பரை மருத்துவர்கள் என்கிற  பெயரில் தற்போது, பல போலி மருத்துவர்கள் உருவாகி இந்திய மருத்துவத்தையே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அந்தரங்க பிரச்சனைகள் குறித்து பேசுவதாக தொலைக்காட்சிகளில் தோன்றி  ஆபாச நடிகைகளுடன் உட்கார்ந்துகொண்டு அசிங்கமாகவும் அறுவருப்பாகவும் பேசி தமிழ் மருத்துவத்தையே சீரழிக்கிறார்கள். இதை, அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது வேதனைக்குரியது.

 

 

தற்போது, 12 ஆம் வகுப்பில் 1100 மேல் மதிப்பெண்கள் எடுத்து எம்.பி.பி.எஸ். மருத்துவர்களைப்போலவே ஐந்தரை வருடம் இரவு பகல் பார்க்காமல் கஷ்டப்பட்டு படித்து பட்டதாரி  ‘ஆயுஷ்’ மருத்துவர்கள் ஆகிறார்கள். ஆனால், இவர்களோ யாரோ அடித்துக்கொடுக்கும் போலிச்சான்றிதழ்களை வைத்துக்கொண்டு நானும் பரம்பரை வைத்தியர் என்று பொய்ச்சொல்லிக்கொண்டு மக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை கொடுக்கிறார்கள். இதனால், நோய் முற்றிய நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும்தான் ஒரிஜினல் மருத்துவர்களை தேடிவருகிறார்கள் மக்கள். இதனால், பல உயிர்கள் காப்பாற்றப்படாமல் போய்விடுகின்றன. விவசாயமும் சித்தமருத்துவமும் இரண்டு கண்கள். இதுவே, ஒருவர் போலியாக அலோபதி மருத்துவம் பார்த்துவிட்டால் உடனடியாக கைதுசெய்யும் அரசாங்கம் இதுபோன்ற போலிகளை கண்டுகொள்வதே இல்லை. இப்படிப்பட்ட போலி மருத்துவர்களால்தான்  அலோபதி மருத்துவம் வளர்ந்து சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. போலிடாக்டர்கள் ஒருபக்கம்… போலிச்சான்றிதழ்கள் இன்னொருபக்கம்… போலிமருத்துவப் பல்கலைக்கழகங்கள் என மக்களின் உயிரோடு விளையாட பலர் கிளம்பிக்கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்திலேயே இதற்கெல்லாம் துணைபோகும் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊரெல்லாம் போலி டாக்டர்களை பிடிப்பதும், நடவடிக்கை எடுப்பதும் வீண் என்கிறார்” என்கிறார் அவர்.

 

சித்த மருத்துவக்கவுன்சில் போர்டே உருவாக்காமல் போலி டாக்டர்களை ஒழிக்கவேண்டிய இடத்தில் போலி டாக்டர்களுக்கு துணையாக இருப்பவர்கள் இருந்தால் தமிழகத்தில் எப்படி போலி டாக்டர்களை ஒழிக்கமுடியும்? மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தீர விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.