Advertisment

அங்கித் திவாரி ஜாமீன் மனு; நீதிபதி அதிரடி உத்தரவு!

Ankit Tiwari Bail Petition; Judge action order

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட நிதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

Advertisment

இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதாரர் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார்.

Advertisment

அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார் சிங், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்து வழக்கில் இருந்து விலகினார். இந்நிலையில் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (15.03.2024) விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகைதாக்கல் செய்ய உள்ள நிலையில் விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார்.எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Ankit Tiwari Bail Petition; Judge action order!

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது. இதனை வேடிக்கை பார்க்க முடியாது.இதுபோன்ற அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கும்போது இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக் கொள்ள முடியாது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது.அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

bail
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe