Advertisment

விண்ணில் ஏவப்பட்ட ‘அனிதா சாட்!’ - திருச்சி மாணவியின் சாதனை

trichy

Advertisment

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி குமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் குமார்- சசிகலா தம்பதியின் மகள் வில்லட் ஓவியா. இவர் திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடந்து ஆய்வு முயற்சியில் வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை வில்லட் ஓவியா உருவாக்கினார்.

மருத்துவக் கல்வியில் கடந்த ஆண்டு திணிக்கப்பட்ட நீட் தேர்வின் கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, தான் கண்டறிந்துள்ள செயற்கை கோளுக்கு ‘அனிதா சாட்’ என்ற பெயரினை மாணவி வில்லட் ஓவியா சூட்டியுள்ளார்.

Advertisment

500 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் மெக்சிகோ நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

anitha chat

இதுபற்றி மாணவி வில்லட் ஓவியா பேசும் போது…

’’எனது பள்ளி படிப்புக்கு இடையே 3 ஆண்டுகள் உழைத்து இந்த செயற்கை கோளை உருவாக்கினேன். இந்த செயற்கைகோளில் வளி மண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு, ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றின் அளவை கண்டறிவதற்கு தேவையான சென்சார் கருவிகள் உள்ளன. மேலும் அது பயணிக்கும் இடங்களை படம் பிடிக்க சிறிய கேமரா, செயற்கைகோளின் இருப்பிடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றையும் பொருத்தியுள்ளேன். செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம்.

மேலும் அது அளிக்கும் தகவல்களை சேகரிக்கவும், அது அனுப்பும் படங்களை பார்க்கவும் முடியும். இது ஏறத்தாழ கடல் மட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கவிடப்படும்.

15 செ.மீ. கியூப் வடிவத்தில் சுமார் 500 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் ஒரு கேப்சூல் எனப்படும் விண்ணுக்கு எடுத்து செல்ல உதவும் கருவியில் வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் மெக்சிகோவில் இருந்து வளிமண்டலத்தில் ஏவப்பட்டது.

மருத்துவர் ஆகும் கனவுடன் நீட் தேர்வை எழுதி அதில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தனது உயிரை நீத்த அனிதாவின் நினைவாக செயற்கைகோளுக்கு அனிதா சாட் என பெயர் வைத்துள்ளேன்.’’ என்று பெருமை பொங்க கூறினார்.

மாணவியின் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகளை மெக்சிகோ ஹார்வர்டு ஸ்பேஸ் நிறுவனம் செய்துள்ளது.

இதற்கிடையே திருச்சியில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் வில்லட் ஓவியா பங்கேற்று எழுதினார். வில்லட் ஓவியாவின் தந்தை ஆல்பர்ட் குமார் மும்பையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாய் சசிகலா மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.

Anita Chad girl oviya Trichi
இதையும் படியுங்கள்
Subscribe