ஈரோடு சூரம்பட்டி, சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் குண்டு ராமு என்கிற ராமச்சந்திரன் (35). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் என்கிற யோகமூர்த்தி (42). தள்ளுவண்டியில் சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் சூரம்பட்டி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு கறிக்கடையில் கதிர்வேல் என்பவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் அங்கு வந்தார். இதை கவனிக்காமல் ராமச்சந்திரன் தனது நண்பருடன் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது யோகமூர்த்தி ஆத்திரத்தில் தான் கொண்டு வந்திருந்த வீச்சரிவாளால் ராமச்சந்திரனின் பின்பக்க தலையில் பலமுறை பலமாக வெட்டியுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காமல் இடது கை மற்றும் விரலில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வீச்சரிவாளை மீட்டனர். ராமச்சந்திரனுக்கு ஆஸ்பத்திரியில் பின்பக்க தலையில் 13 தையல்களும், இடது கை மணிக்கட்டுபகுதியில் 7 தையல்களும் போடப்பட்டன. ஆபத்தான நிலையில் ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், தப்பி ஓடிய யோகமூர்த்தியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.