Skip to main content

மகள் மீது கோவம்... தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Angry over daughter ... Couple passed away

 

பெற்றோரின் சொல்லைக் கேட்காமல் மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த தந்தை மற்றும் தாய், விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ளது கம்மாளக் குட்டை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள பண்ணாரியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (58) - சுமதி (48) தம்பதி. இவர்களுக்கு ஜனனி (22) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஃபிசியோதெரபி மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்துவருகிறார். ஜனனி, குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய கோழி இறைச்சி கடை நடத்திவருபவரைக் காதலித்துள்ளார்.

 

இதனை அறிந்த பெற்றோர்கள் தனது மகளைக் கண்டித்தும், காதலைக் கைவிடக் கோரியும் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளனர். ஆனாலும் ஜனனி தனது காதலைக் கைவிடவில்லை. மேலும், ஜனனி கடந்த 2ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அவர்கள் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை செல்ஃபோனில் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (05.09.2021), பழனிச்சாமி தனது தாயின் திதிக்கு சாமி கும்பிட வீட்டிற்கு வரச் சொல்லி உறவினர்கள் பலரையும் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று நேற்று காலை உறவினர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் பழனிச்சாமி - சுமதி இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

தகவல் அறிந்த காவல்துறையினர் தம்பதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்தனர். விசாரணையில், படிக்காத 44 வயதானவரை மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த தம்பதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், வாழைப்பழத்தில் விஷ மாத்திரைகளை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து காவல்துறையினர் விசாரனை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Announcement of Communist Party of India candidates

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார். திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். 

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.