andhra and tamilnadu officers seized buses

Advertisment

தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அந்த மாநில போக்குவரத்துக் கழகங்களும் தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கிவருகின்றன. இந்த மாநிலங்களில் இயங்கும் சில தனியார் பேருந்துகளும் அருகில் உள்ள மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றன.

இதற்காக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அமர்ந்து பேசி ஒருநாளைக்கு இத்தனை பேருந்துகள் எங்கள் மாநிலத்திலிருந்து உங்கள் மாநிலத்துக்கு வரும் எனப் பேருந்துகளின் எண், நேரம் ஆகியவை அடங்கிய பட்டியலைத் தந்து அனுமதி பெறுவார்கள். அதேபோல் அந்தந்த மாநில போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பேருந்துகளின் பதிவு எண், நேரம் போன்றவற்றைத் தந்து அனுமதி பெறுவார்கள். பேருந்துகள் இயங்கிவரும். முக்கியமான நில நாட்களில் அதாவது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு மற்றும் சில முக்கிய பண்டிகைகளின் போது இந்த மாநில போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்கும். அதற்கு அனுமதி பெறுவார்கள், சிலசமயம் அனுமதி பெறாமலும் இயக்குவார்கள்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிறந்த ஊரை விட்டு பிற மாநிலங்களில் வேலை செய்பவர்கள், தங்களது ஊருக்குப் போவதும், வருவதுமாக உள்ளார்கள். இதில் சில பேருந்துகள் பர்மிட் இல்லாமல் மாநில எல்லையைத் தாண்டிப் போய் வந்துள்ளன.

Advertisment

ஜனவரி 14 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஆந்திராவிலிருந்து வந்த 5 அரசு பேருந்துகள் உரிமம் பெறாமல் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் சென்றன என தமிழக போக்குவரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களது கோட்ட அதிகாரிகளுக்கு செல்போன் வழியாகத் தகவல் தந்தனர்.

இதுகுறித்த பேச்சுவார்த்தை அதிகாரிகள் மட்டத்தில் நடந்துள்ளது, அபராதம் கட்டிவிட்டு வண்டிகளை எடுத்துச்செல்லச்சொல்லுங்கள் எனத் தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது ஆந்திரா அதிகாரிகளுக்குக் கோபத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை சுமூகமற்ற முறையில் முடிந்துள்ளன.

இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி, குப்பம், பலமனேரி நகருக்கு தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்தை ஆந்திரா போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இந்த தகவல் தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த அவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். ஆந்திரா அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் பேசியபோது, அபராதம் கட்டிவிட்டு வண்டியை எடுத்துச்செல்லுங்கள் எனப் பதில் தந்துள்ளனர்.

இந்த ஏட்டிக்கு போட்டி செயல்பாடுகளால் பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இரண்டு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.