திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ப.தரணிதரன்., அபிமன்யூ ஆகியோர் கந்திலி சுற்றுவட்டாரப் பகுதியில் வழக்கமான கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரியனேரியில் ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

Advertisment

ancient stone found near thirupathur

இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, "திருப்பத்தூரில் இருந்து 10கி.மீ தொலைவில் நரியனேரி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும் உட்புறச் சாலையில் அவ்வூரைச் சேர்ந்த மணி என்பவரது விவசாய நிலத்தின் நடுவில் பழமையான நடுகல் ஒன்று அமைந்துள்ளதைக் கண்டறிந்தோம். இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவன் அமர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவனது இடது கையினை மார்பிலும் வலது கையினை மேல்நோக்கி உயர்த்தியவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவனது தலைக்கு மேல்புறம் பெரிய அளவிலான குடை ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்குடை அவனை ஒரு அரசன் என அடையாளப்படுத்துகின்றது.

Advertisment

கல்லின் இடது புறத்தில் நின்ற நிலையில் பெண் ஒருத்தி எரியும் விளக்கினை ஏந்தியவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். இது இறந்த அரசனை தெய்வமாக வழிபடும் நிலைதனை எடுத்துரைப்பதாக உள்ளது.

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவியாகும். மன்னிக்க இயலாத பெருங்குற்றம் புரிவோர்க்கு இத்தண்டனையினை வழங்குவர் அல்லது செய்த குற்றத்திற்குப் பொறுப்பேற்றுத் தாமே கழுமரம் ஏறுவதும் உண்டு. கழுவில் வகைகள் உண்டு. செங்குத்தான கழுமரம் மற்றும் அமர்ந்த நிலையில் ஏற்றும் கழுமரம். குற்றம் புரிந்தோரைக் கழுவின் முனையில் எண்ணையினைத் தடவிக் குற்றாவளியைப் பிடித்து அவனது ஆசனவாயைக் கழுமுனையில் வைத்து அப்படியே செருகிவிடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக மேலே துளைத்துக் கொண்டு ஏறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள் ஏறி குற்றவாளி இறந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள் அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.

Advertisment

நரியனேரியில் காணப்படும் இக்கழுமரத்தில் உள்ளவன் ஆளும் தகுதி படைத்த சிற்றரசனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். ஆகவே மிகப்பெரிய குற்றத்தினைச் செய்ததற்குப் பொறுப்பேற்ற அவ்வரசன் தாமே முன்வந்து கழுவேறி உயிர் துறந்திருக்கக்கூடும். இல்லை என்றால் வேறு ஒரு வலிமைவாய்ந்த அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட ராஜ்ஜியத்தில் அவனுக்குக் கீழ் ஆட்சி செய்த இச்சிற்றரசன் செய்த குற்றத்திற்காக கழுவேற்றப்பட்டிருக்காலாம். எப்படி இருப்பினும் கழுமரத்தில் உயிர்துறந்த சிற்றரசன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவனாக இருக்கக்கூடும். ஆகவேதான் அந்நிகழ்வினை இக்கல்லில் சிற்பமாக வடித்து மக்கள் வணங்கி வந்துள்ளனர்" என்றார்.

இத்தகவலை உறுதி செய்து இக்கல்லின் காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டாண்டைச் சேர்ந்தது என்று மேனாள் தொல்லியல் துறை உதவி இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் சேகர் உறுதிப்படுத்தி ஆய்வுக்குழுவினரைப் பாராட்டினர்.