
"உழவர்களிடமிருந்து ரூ.811 கோடிக்கு நெல்லை கொள்முதல் செய்து விட்டு, அதற்கான பணத்தை வழங்காத தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று" பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உழவர்களிடம் ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான விலையை இரு மாதங்களுக்கும் மேலாக உழவர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் சார்பில் நெல் கொள்முதல் செய்த தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, அவற்றைக் காப்பாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் அந்தப் பொறுப்பை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு தாரை வார்த்தது தான் இப்போது ஏற்படிருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இதுகுறித்த செய்திகள் கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் வெளியான போதே, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாகவே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
அதை செய்திருந்தாலே இப்போது ஏற்பட்டிருக்கும் அவல நிலையை தடுத்திருக்க முடியும். ஆனால், அதை செய்யாத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் 2014 ஆம் ஆண்டிலிருந்தே நெல் கொள்முதலில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்படும் என்றும் சான்றிதழ் அளித்தார். அவ்வாறு அமைச்சரால் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனம் தான் உழவர்களிடமிருந்து ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து விட்டு, அதற்கான பணத்தைக் கொடுக்காமல் அப்பட்டமாக ஏமாற்றி வருகிறது. இதை பா.ம.க.வால் சகித்துக்கொள்ள முடியாது.
தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.500 கோடிக்கு தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் செய்திருக்கிறது. அதன் பின் இரு மாதங்களாகியும் நெல்லுக்கான கொள்முதல் விலை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் கடந்த 20 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டும் கூட, உழவர்களுக்கு நிலுவையை பெற்றுத் தர அரசு முன்வரவில்லை.
உழவர்களிடமிருந்து மொத்தம் ரூ.811 கோடி மதிப்புள்ள 33.11 லட்சம் குவிண்டால் நெல்லை கொள்முதல் செய்த தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு, அதில் ஒரு பகுதியை தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாரியத்திற்கு வழங்கி, அதற்காக இன்று வரை ரூ.210 கோடியை பெற்றுள்ளது. ஆனால், அந்தத் தொகை இன்னும் உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் குவிண்டால் நெல் நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வழங்கப்படாமல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
உழவர்களிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு செய்த ஊழலுக்கும், அதனால் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மட்டும் தான் செய்ய வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் 8 மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் உரிமையை தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டது பெரும் தவறு ஆகும். அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு உழவர்களிடம் நெல்லை கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகளை செய்வதாகவும், உழவர்களுக்கு பணம் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது அதை விட பெரும் தவறு. இதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
இப்போதும் கூட உழவர்களிடமிருந்து ரூ.811 கோடிக்கு நெல்லை கொள்முதல் செய்து விட்டு, அதற்கான பணத்தை வழங்காத தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்களுக்கு துரோகம் செய்த மோசடி அமைப்பை தமிழக அரசு பாதுகாப்பதற்கான காரணம் என்ன? அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் உரிமை வழங்கப்படுவதற்கு மறைமுகமாக உதவிய சக்தி எது? அந்த அமைப்பின் மீது ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு பாசம் ஏன்?
தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் வாயிலாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்ட நெல்லுக்கு பணம் கிடைக்காததால், லட்சக்கணக்கான உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலையில், பல உழவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் வேடிக்கப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; நெல் வழங்கிய உழவர்கள் அனைவருக்கும் அதற்கான தொகையை தமிழக அரசே நேரடியாக வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் உழவர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாரியம் மட்டும் தான் நெல்லை கொள்முதல் செய்யும் என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் உழவர்களைத் திரட்டி எனது தலைமையில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.