Skip to main content

தமிழ்நாடு போதைக்காடாகி விடும்; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் - அன்புமணி

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

anbumani talk about  chennai high court pan masala judgement

 

குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்ற ரத்து செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும்.

 

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்து கடந்த 2018-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணைக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ்பாபு ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

 

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் 30(2)(ஏ) பிரிவின்படி புகையிலை பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் தான் இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, புகையிலை என்பது உணவுப் பொருள் அல்ல என்ற புகையிலை நிறுவனங்களின்  வாதத்தையும் உயர்நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.

 

இவை இரண்டுமே தவறாகும். புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம் தமிழ்நாட்டை போதைக் காடாக்கி விடும். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே ஆண்டுக்கு 3,000 டன்னுக்கும் கூடுதலாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. குட்கா மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் அனைத்து பெட்டிக் கடைகளிலும் குட்கா விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விடும். அதன் தீயவிளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை.

 

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை உலக சுகாதார நிறுவனமும்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கின்றன.

 

இந்தியாவில் மதுவுக்கு அடுத்தபடியாக மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது புகையிலை தான். புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்-2006, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் (Cigarettes and Other Tobacco Products Act -COPTA) ஆகியவை நிறைவேற்றப்பட்டன. இந்த இரு சட்டங்களின்படி இந்தியா முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் குட்கா தடை செய்யப்பட்டிருக்கிறது.

 

புகையிலைப் பொருட்கள் மீதான தடையை அகற்ற வேண்டும் என்பதற்காக புகையிலை நிறுவனங்கள் பின்பற்றும் ஒரே ஆயுதம் குட்கா, புகையிலை போன்றவை உணவுப் பொருட்கள் அல்ல என்று வாதிடுவது தான். ஆனால், இது தொடர்பான வழக்குகளை 2000-ஆவது ஆண்டுகளின் இறுதியில் விசாரித்த உச்சநீதிமன்றம், புகையிலைப் பொருட்களும் உணவு வகைகள் தான் என்று தீர்ப்பளித்துள்ளது. இதையும்,  புகையிலையின் தீமைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது செல்லும் என்று தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது எத்தகைய வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதோ, அதே போன்ற வழக்கு ஒன்றில் கடந்த 30.11.2021 அன்று தீர்ப்பளித்த தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி இராஜசேகர ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்ய உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் உண்டு என கூறியிருக்கிறது. மெல்லும் பொருட்கள் அனைத்தும் உணவுப் பொருட்கள் தான் என்பதால் புகையிலையும் உணவுப் பொருள் தான் என்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

 

‘‘ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்களோ, அதை விட அதிகம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். புகையிலை காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுநலன் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ள குட்கா தடை சட்டத்தில் குறுக்கிட நீதிமன்றம் விரும்பவில்லை. மனித உயிர்களை காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள அறிவிக்கையில் குறை காண கூடாது’’ என்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.  சென்னை உயர்நீதிமன்றமும் இதே போன்ற தீர்ப்பைத் தான் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் முரணான தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

தமிழ்நாட்டில் குட்கா தடை செய்யப்பட்டதற்கும் நான் தான் காரணம். 2011 முதல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு குட்கா தடை செய்யப்பட வேண்டியதன் நோக்கத்தை வலியுறுத்து தொடர்ந்து பல கடிதங்கள் எழுதியதன் பயனாகவே  தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டது. அந்தத் தடை அகற்றப்படக் கூடாது. அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மற்றொருபுறம் குட்கா தடை செய்யப்பட  காரணமான இரு சட்டங்களையும் இன்னும் கடுமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.