Advertisment

“சென்னை மாநகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்” - அன்புமணி பகீர் குற்றச்சாட்டு

anbumani said Chennai Corporation issues tender for completed building

தமிழ்நாட்டில் பல லட்சங்கள் மதிப்பிலான பணிகளுக்கும், சில கோடிகள் மதிப்பிலான பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் முறைப்படி கோரப்படுவதற்கு முன்பே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் மின்கல (பேட்டரி) ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னை மாநகராட்சியால் கோரப்பட்டுள்ளன. இத்தகைய அப்பட்டமான விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

அரசுத் துறைகளுக்காக ஏதேனும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், அதற்காக முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, குறைந்த தொகையில் தரமான கட்டுமானப் பணிகள் செய்து தருவதாக குறிப்பிட்டிருக்கும் தகுதியுடைய ஒப்பந்ததாரருக்குத் தான் குறிப்பிட்ட பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். இது தான் விதியாகும்.

சென்னை மெரினா கடற்கரையில் மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தலா 11 பேர் அமரும் வசதி கொண்ட இரு மின்கல ஊர்திகள் கடந்த சில நாள்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், ரூ.8.3 லட்சம் செலவில் மின்கல ஊர்திகளுக்கான வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 20-ஆம் தேதி கோரப்பட்டுள்ளன. ஜூன் 23-ஆம் தேதி வரை பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணி செய்வதற்கான ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அதிகாரியிடம் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியாளர் கேட்ட போது, அவரால் பதில் கூற முடியவில்லை. மீண்டும், மீண்டும் வினா எழுப்பப்பட்ட நிலையில், புதிதாக மேலும் இரு மின்கல ஊர்திகள் இயக்கப்படவிருப்பதாகவும், அவற்றுக்கான வாகன நிறுத்தம் கட்டுவதற்காகவே இந்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் பதிலளித்துள்ளார் அந்த அதிகாரி.

அப்படியானால், ஏற்கனவே கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது? அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படாதது ஏன்? அதைக் கட்டியவர் யார்? என்பன உள்ளிட்ட எந்த வினாவுக்கும் அந்த அதிகாரியிடம் பதில் இல்லை. அதுபற்றி தாம் விசாரிப்பதாகக் கூறி அவர் நழுவிக் கொண்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரியின் விளக்கம் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டதை சமாளிப்பதற்கானவை தான் என்பதில் ஐயமில்லை.

பல லட்சம் பேர் கூடும் மெரினா கடற்கரையில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள இடத்தில் மாநகராட்சிக்கு தெரியாமலேயே வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது என்பதும், அதை கட்டியவர்கள் யார்? என்பது தெரியாமலேயே அங்கு மின்கல ஊர்திகளை மாநகராட்சி பணியாளர்கள் நிறுத்துவதும் திராவிட மாடல் ஆட்சியின் வினோதங்கள். அடுத்த சில நாட்களில் மாநகராட்சிக்கு தெரியாமலேயே , வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டதற்கான தொகை யாருக்காவது வழங்கப்படும். அது திராவிட மாடல் அரசின் அதிசயமாக அமையும்.

தமிழ்நாட்டில் பல லட்சங்கள் மதிப்பிலான பணிகளுக்கும், சில கோடிகள் மதிப்பிலான பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் முறைப்படி கோரப்படுவதற்கு முன்பே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஒப்பந்தப்புள்ளி வழங்கும் நடைமுறைகள் முடிவதற்கு முன்பே வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வந்ததால் தான் இந்த முறைகேடு அம்பலத்திற்கு வந்துள்ளது. மொத்தத்தில் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசு ஆகும். இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு விரைவில் வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

anbumani Chennai municipality
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe