Skip to main content

கரோனா பரவலைத் தடுக்க ஒரே தீர்வு! அன்புமணி சொல்லும் யோசனை

 

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை  தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரசின் தீவிரத்தையும், அது பரவும் வேகத்தையும் வைத்துப் பார்க்கும் போது, மூன்றாம் நிலை நோய்ப் பரவலைத்  தடுக்க, நான் ஏற்கனவே கூறியவாறு அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு செய்வது தான் ஒரே தீர்வாகும்.


 

anbumani ramadoss




கொரோனா வைரஸ் நோய் பரவும் வேகம் கடந்த சில வாரங்களில் மேலும் அதிகரித்திருக்கிறது. கடந்த திசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய் கடந்த 6-ஆம் தேதி வரை 91 நாடுகளில் ஒரு லட்சத்து 645 பேரைத் தாக்கியிருந்தது. அவர்களில் 3411 பேர் உயிரிழந்திருந்தனர். அதற்கு பிறகு நேற்று வரையிலான 12 நாட்களில் கூடுதலாக 81 நாடுகளில் பரவியதுடன், புதிதாக  ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரைத் தாக்கியிருக்கிறது. இந்த கால இடைவெளியில் மட்டும் கூடுதலாக  5376 பேர் உயிரிழந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8787 ஆக அதிகரித்துள்ளது. சுருக்கமாக கூற வேண்டுமானால் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய முதல் 100 நாட்களில் ஏற்பட்டதை விட கூடுதல் பாதிப்பு கடந்த 10 நாட்களில் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் எவ்வளவு கொடுமையானது; ஆபத்தானது; பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கு இந்த புள்ளி விவரங்கள் தான் சாட்சியாகும். இந்த ஆபத்தை இந்தியா, குறிப்பாக தமிழகம் உணர வேண்டும்.
 

அமெரிக்கா உள்ளிட்ட உலகில் பல வளர்ந்த நாடுகளே கொரோனா பாதிப்பை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாமல், 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களை இறக்க அனுமதிக்கும் அவல நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில்  இன்றைக்குள் சீனாவை விஞ்சி, இத்தாலி முதலிடம் பிடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஈரான், சுவிட்சர்லாந்து, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கக் கூடியவையாக உள்ளன. இந்த அவல நிலைக்குக் காரணம் அந்நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடின்றி பரவும் நிலையை அந்த நாடுகள் அனுமதித்தது தான்.


 

 

இந்தியாவில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளையும், உயிரிழப்புகளையும் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கொரோனா பேரழிவை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. ஆகவே, கொரோனா வைரஸ் பரவலில், இப்போது இரண்டாவது நிலையில் இருக்கும் இந்தியா, மூன்றாவது நிலையான சமுதாயப் பரவலாக மாறுவதைத் தடுப்பதன் மூலம் தான் மிகப்பெரிய பேரழிவை தடுக்க முடியும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களை பிரித்து வைப்பதன் மூலம் மூன்றாம் நிலை சமுதாயப் பரவல் தமிழகத்தில் நிகழாமல் தடுக்க முடியும்.
 

தமிழகத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும் போதிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இது போதுமானதல்ல. தமிழகத்திலுள்ள அனைத்து கடைகளை மூடுவதுடன், போக்குவரத்தையும் ரத்து செய்து முழு அடைப்பை மேற்கொள்ள வேண்டும்.  பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு ஊரடங்குக்கு இணையான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அடுத்த 3 வாரங்களுக்கு இத்தகைய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் தான் கொரோனா வைரசின் சமுதாயப் பரவலையும், அதன் மூலமான மனிதப் பேரழிவையும் தடுக்க முடியும்.


 

 

இத்தகைய நடவடிக்கைகளால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுவதையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாழ்வாதார இழப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியாது. எனினும், கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இது பெரிதல்ல. முழு அடைப்பு காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய, மாநில அரசுகள் ஈடு செய்ய வேண்டும். கோரோனா பாதிப்பு விலகி, இயல்பு நிலை திரும்பும் வரை அனைத்து வகையான வங்கிக் கடன் தவணைகளும் ஒத்திவைக்கப்படுவதுடன், வட்டித் தள்ளுபடியும் வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அரசே வழங்க வேண்டும். மற்ற மக்களும் முழு அடைப்புக் காலத்தில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும்.
 

ஒரு மருத்துவராகவும், மத்திய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையிலும் நான் தெரிவிக்கும் இந்த தடுப்பு யோசனைகள் அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இதைத் தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரசை தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, மனிதப் பேரழிவை தடுக்க, வருமுன் காக்க தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.