Skip to main content

குழந்தைகளை குறிவைக்கும் சிகரெட் நிறுவனங்கள்: அன்புமணி ராமதாஸ்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
anbumani ramadoss


இன்றைய இளைய தலைமுறையினரை சிகரெட்டுக்கு அடிமையாக்கி அழிக்கும் முயற்சியில் சிகரெட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். எனவே, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தனி உரிமம்  பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளின் வழியாக 8 வயது குழந்தைகள் கூட புகைப்பிடிக்கும்  வழக்கத்திற்கு அடிமையாக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவர்களையும்,  குழந்தைகளையும் குறிவைத்து புகையைத் திணிக்கும் சிகரெட் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
 

இந்தியாவின் 6 மாநிலங்களில் உள்ள 20 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் சிகரெட் விற்கப்படுவது பற்றி நுகர்வோர் குரல் (Consumer Voice), இந்திய தன்னார்வ சுகாதார சங்கம் (Voluntary Health Association of India) ஆகிய அமைப்புகள் இந்த ஆய்வுகளை நடத்தின. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் உட்பட நாடெங்கும் 20 மாவட்டங்களில் உள்ள 243 பள்ளிகளைச் சுற்றி சிகரெட் விற்பனை நடைபெறும் 487 இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
 

இந்த ஆய்வில் 225 இடங்களில் பள்ளிக் குழந்தைகளை குறிவைத்து சிகரெட் சந்தைப்படுத்தப்படுவதும், காட்சிப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இவற்றில் 91 விழுக்காடு இடங்களில் சிகரெட்டுகள் குழந்தைகளின் கண்களில் எளிதில் படும் வகையில் ஒரு மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருக்கின்றன. 54% கடைகளில் புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்த எந்த எச்சரிக்கையும் வைக்கப்படவில்லை. 90 விழுக்காடு கடைகளில் மிட்டாய்கள், பொம்மைகள் ஆகியவற்றையொட்டி சிகரெட் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, பல கடைகளில் மாணவர்கள்  உள்ளிட்ட வாடிக்கையாளர்களை கவரும் நோக்குடன் தள்ளுபடி விலையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன; இன்னும் சில கடைகளில் அவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன. சில்லரை விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தடையை மீறி பெட்டிகளைப் பிரித்து ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையிலும் சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
 

இந்த உத்திகள் அனைத்தும் மாணவர்களையும், குழந்தைகளையும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் நோக்கம் கொண்டவை ஆகும். இந்த தந்திரங்கள் எதுவும் கடைக்காரர்களால் செய்யப்படுவதில்லை. மாறாக, சிகரெட் நிறுவனங்கள் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின்படி தான் இவை செய்யப்படுகின்றன. இதற்காக கடைகளின் உரிமையாளர்களுக்கு சிகரெட் நிறுவனங்கள் தாராளமாக பணம் கொடுக்கின்றன.


புகையிலை மற்றும் சிகரெட் பழக்கம் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இறப்புக்கு காரணம் புகையிலை தான் என்று தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புகையிலை மற்றும் சிகரெட்டுக்கு  இவ்வளவு பேர் இறப்பதால் குறையும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டுவதற்காக, புதிய நுகர்வோராக குழந்தைகளை உருவாக்கும் நோக்குடனேயே இத்தகைய செயல்களில் சிகரெட் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
 

சிகரெட் நிறுவனங்களின் இந்த செயல்களால் 8 வயது குழந்தைகள் கூட புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். சிகரெட் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படங்களில்  கதாநாயகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் திணித்து அதன்மூலமாக குழந்தைகள் மற்றும் மாணவர்களை புகைக்கு அடிமையாக்கும் உத்தியையும் சிகரெட் நிறுவனங்கள் செய்கின்றன. இதற்கு தெரிந்தோ, தெரியாமலோ திரைத்துறையினரும் துணை போகின்றனர். இத்தகைய செயல்கள் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தின் 5 மற்றும் 6&ஆவது பிரிவுக்கு எதிரானதாகும். இப்பிரிவுகளின் படி சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்தல் மற்றும் காட்சிப்படுத்துதல்,  18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விற்பனை செய்தல், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் புகையிலைப் பொருட்களை விற்றல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆனால், இந்த விதிமீறலைத் தடுக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. 
 

இளம்வயதிலேயே மாணவர்கள் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதால் ஏராளமான பாதிப்புகள்  ஏற்படுகின்றன. இளம்வயதில் முக்கிய உறுப்புகள் போதிய முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதால், அவை மிக எளிதாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் உள்ளிட்ட எவரும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பயன்பாட்டால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத் தான் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
 

ஆனால், அவை எதுவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததன் விளைவாக குழந்தைகள் உள்ளிட்ட இன்றைய இளைய தலைமுறையினரை சிகரெட்டுக்கு அடிமையாக்கி அழிக்கும் முயற்சியில் சிகரெட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். எனவே, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தனி உரிமம்  பெற வேண்டும்; அந்தக் கடைகளில் சாக்லெட்டுகள், மிட்டாய்கள், பொம்மைகள், ரொட்டிகள், மென் பானங்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு விருப்பமான எந்தப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது  என்ற சுகாதார அமைச்சகத்தின் யோசனையை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.