Skip to main content

தமிழகத்தை மிரட்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்: மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
anbumani-ramadoss



டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் கடந்த காலங்கள் அளவுக்கு தீவிரமடையாமல் தடுக்க, தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சைகளையும்  தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 தமிழ்நாட்டில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றின் தாக்கமும், பாதிப்பும் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளன. இந்த இரு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
 

தமிழகத்தில் இன்று காலையில் சில மணி நேரத்தில் மட்டும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு  மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்குவுக்கு மருத்துவம்  பெற்று வந்த மாதவரத்தைச் சேர்ந்த தக்சன், தீக்ஷா என்ற 7 வயது இரட்டைக் குழந்தைகள் மருத்துவர் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தனர்.

 

அதேபோல், நாகர்கோவிலைச் சேர்ந்த தெரசா என்ற பேராசிரியை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவம் பெற்று வந்தார். ஆனால், மருத்துவம் பயனளிக்காததால் இன்று காலை காலமானார். மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு மருத்துவம் பெற்று வந்த வீரம்மாள், மீனாட்சி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்கள் தவிர பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பெண்கள் நேற்று உயிரிழந்தனர்.

 

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. மதுரையில் மட்டும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் தவிர மேலும் பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  அவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் நிலைமை கட்டுக்குள் அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
 

பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான  மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை கண்டறியும் வசதிகளும், குணப்படுத்தத் தேவையான மருந்துகளும் இல்லை.
 

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் சில வாரங்களுக்கு முன்பே தெரியத் தொடங்கி விட்ட நிலையில், அரசு உடனடியாக விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தியதுடன் பினாமி அரசு அதன் கடமையை முடித்துக் கொண்டது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஆட்சியாளர்களின் அலட்சியத்துக்கு இதுவே சாட்சியாகும்.
 

தேசிய அளவில் டெங்கு காய்ச்சலால் கடந்த ஆண்டு மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் ஆகும். கடந்த ஆண்டில் தமிழகத்தில் 23,294 பேர் பாதிக்கப்பட்டனர்; 65 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு 3315 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
 

இதிலிருந்து தமிழக சுகாதாரத்துறை பாடம் கற்றுக் கொண்டு நோய்த்தடுப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவு தான் காய்ச்சலுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

மருத்துவர் என்ற முறையில் மக்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை என்பது தான். டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடைந்து விடலாம்.


மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடிப்பதன் மூலமும், நில வேம்பு கசாயத்தை அருந்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்; குணப்படுத்தவும் முடியும். அதேபோல், டெங்கு காரணமாக இரத்தத் தட்டுகள் குறைந்தால் பப்பாளி இலைச்சாற்றை காய்ச்சி குடிப்பதன் மூலம் சரி செய்ய முடியும் என்பதால் அச்சமடைய வேண்டாம்.
 

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் கடந்த காலங்கள் அளவுக்கு தீவிரமடையாமல் தடுக்க, தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சைகளையும்  தீவிரப்படுத்த வேண்டும். அத்துடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
 

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்