/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbumani-mic-pm-art-1_0.jpg)
சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் வருவாயிலும், நிலப்பரப்பிலும் பெரிய 6 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம் மாநகராட்சியின் ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அல்லாத அதிகாரியான இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தில் அப்பட்டமான விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாகவும், ஆட்சியாளர்களின் விருப்பங்களை எதிர்கேள்வி எழுப்பாமல் நிறைவேற்றுபவர் என்பதால் தான் அவர் சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளின் களமாக மாற்ற தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. சேலத்தைப் போலவே மிக முக்கிய மாநகராட்சிகளின் ஆணையர்களாக இந்திய ஆட்சிப் பணி அல்லாத அதிகாரிகள் அண்மைக்காலமாக நியமிக்கப்பட்டு வருவதும், மேலும் பல முதன்மையான மாநகராட்சிகளிலும் இதையே நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவருவதும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் வரி வருவாய் ஈட்டும் மாநகராட்சிகளில் ஒன்றான ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் கடந்த ஜனவரி மாதம் ஈரோடு ஆணையராக மாற்றப்பட்டார். அவருக்குப் பிறகு ஓசூர் ஆணையாளராக எவரும் நியமிக்கப்படவில்லை.
அடுத்த ஒரு மாதத்திற்குள் ஈரோட்டிலிருந்து மயிலாடுதுறை ஆட்சியராக ஸ்ரீகாந்த் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து ஓசூர், ஈரோடு மாநகராட்சிகளின் ஆணையர்களாக இந்திய ஆட்சி பணி அல்லாத அதிகாரிகளை நியமிக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் தமிழக நலனுக்கு நன்மை சேர்ப்பதாக இல்லை. சேலம் மாநகராட்சி ஆணையராக முனைவர் இளங்கோவன் நியமிக்கப்பட்டதில் விதிகள் எவ்வாறு வளைத்து, நெளிக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்ட விரும்பிகிறேன். சேலம் மாநகராட்சியின் ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக கடந்த மாதம் மாற்றப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவருக்கு பதில் புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை.
மாறாக, பிப்ரவரி 10ஆம் தேதி சேலம் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த இளங்கோவனுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. அவருக்கு நிலையான பதவி உயர்வு வழங்க நீண்ட, நெடிய நடைமுறைகள் பின்பற்றப்ப்பட வேண்டும்; அதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்பதால் அவசர, அவசரமாக அவருக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி கடந்த 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அதே நாளில் அவர் அயல்பணி முறையில் சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் இதுவரை காட்டப்படாத வேகம் இளங்கோவன் பதவி உயர்வு விவகாரத்தில் காட்டப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 6 மாநகராட்சிகள் மட்டுமே இருந்து வந்த நிலையில், அண்மைக்காலங்களில் பல நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக்கப்பட்டன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem-city-municipal-comissioner-office-art.jpg)
அதன் பயனாக தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. நகராட்சிகளாக இருந்த போது அவற்றின் ஆணையராக தொகுதி 2 நிலை அதிகாரிகள் தான் இருப்பர். மாநகராட்சிகளாக்கப்பட்ட பிறகு அவற்றின் ஆணையர்களாக இளம் இந்திய ஆட்சி பணிஅதிகாரிகள் நியமிக்கப்படுவது தான் வழக்கம். ஆனால், இளம் இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் முறைகேடுகளுக்கும், விதிமீறல்களுக்கும் உடன்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மாற்றாக தங்களின் குறிப்பறிந்து நடக்கக்கூடிய இந்திய ஆட்சி பணி அல்லாத அதிகாரிகளை மாநகராட்சிகளின் ஆணையர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நேர்மையான அதிகாரிகளே கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை சேலம் ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதில் தமிழக அரசு காட்டிய வேகமும், விதிமீறல்களும் உறுதி செய்கின்றன.
நேர்மையான அதிகாரிகளுக்கு தண்டனை பதவியும், முறைகேடுகளுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்கு செல்வாக்குள்ள பதவிகளும் வழங்கப்படுவது நல்லாட்சியின் அடையாளம் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் இன்றைய நிலையில், 13 மாநகராட்சிகளில் மட்டும் தான் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆணையர்களாக உள்ளனர். மீதமுள்ள மாநகராட்சிகளில் இ.ஆ.ப அல்லாத அதிகாரிகள் தான் ஆணையர்களாக உள்ளனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும், சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் இந்திய ஆட்சி பணி நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் இந்திய ஆட்சி பணி அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)