Anbumani Ramadoss said that we will announce the alliance in due time

“கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக்கீழ் கொண்டு வர வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஈரோட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உலக அளவில் பேட்மிட்டன் போட்டியில் இந்தியா பல பரிசுகளை பெற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உலக அளவில் பதக்கங்களை வாங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். குறிப்பாக கிராமப்புற மாணவ - மாணவிகள் அதிகமாகப் பங்கேற்க தொடங்கி உள்ளனர். தமிழக அரசு இன்னும் ஊக்குவிக்க வேண்டும்.நீண்ட காலமாக அத்திக்கடவு - அவினாசி திட்டம் முடிக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக 90 சதவீதம் முடிவடைந்தும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

Advertisment

ஆகஸ்ட் மாதத்தில் குறைவான மழை கிடைத்துள்ளது. உடனடியாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்ற வேண்டும். பாண்டியாறு - புண்ணம்பழா திட்டம், காவிரி குண்டாறு திட்டம் ஆகிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன. விசைத்தறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேகதாதுவில் அணை கட்டுவது கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்றம் கூறியும் அதனை ஏற்க மறுக்கிறது கர்நாடகா. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும். நெல் குவிண்டாலுக்கு 7 ரூபாய் மட்டுமே தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயம் அழிந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பு அணைகள் நாங்கள் கேட்டோம். ஆனால் தற்போது 10 மணல் குவாரிகளை உருவாக்கி உள்ளது இந்த அரசு.

என்.எல்.சி.கடலூர் மாவட்டத்தின் பிரச்சினை இல்லை. இது தமிழகத்தின் பிரச்சினை. தமிழக அரசு 67 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை என்.எல்.சிக்குகொடுத்துள்ளது. விளை நிலங்களை அழித்து மின்சாரம் தேவையில்லை. காற்றாலை, நீர் உள்ளிட்ட மூலமாக தயாரிக்கலாம். தமிழகத்தின் நான்காவது நெல் உற்பத்தி பகுதியினை தற்போது தமிழக அரசு என்.எல்.சி. நிர்வாகத்தின் மூலம் விளைநிலங்களை அழித்து வருகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது குறித்து அதிலுள்ள சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே உள்ளது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்த தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை.

Advertisment

இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன பரிந்துரை கூறுகிறதோ அதற்கு பிறகு நாங்கள் கருத்து தெரிவிப்போம். விரைவில் கூட்டணி குறித்து எங்களது முடிவை அறிவிப்போம். நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்திற்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. தகுதியான மருத்துவரை நீட் தேர்வு உருவாக்கவில்லை. மருத்துவ படிப்பு என்பது வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நீட் தேர்வு குறித்து ஆளுநர் தனிப்பட்ட கருத்துக்களை திணிக்கக் கூடாது. ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் இளைஞர்களிடம் மது, சூது, போதைப் பொருட்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்புப் பிரிவில் போதுமான காவலர்கள் இல்லை.

தமிழகத்தில் தற்போது மதுவிலக்குத் துறை அமைச்சர் இல்லை மது விற்பனை துறை அமைச்சர் தான் உள்ளார். அந்த துறை தற்போது மது விற்பனை துறையாக மாறிவிட்டது. தமிழக அரசு சாராயத்தில் மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்து கொண்டு உள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.